வாயில் எண்ணெய் வைத்துக் கொப்பளித்தல், இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வந்த பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். கடந்த சில ஆண்டுகளாக அதன் நன்மைகள் பரவலாகத் தெரிய வந்துள்ளன.
ஆங்கிலத்தில் 'ஆயில் புல்லிங்' என்று கூறப்படும் வாயில் எண்ணெய்க் கொப்பளித்தல் பல நன்மைகளை அளிக்கும் என்று அறிவில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நமது வாயில் 700 வகைக் கிருமிகள் வரை இருக்கக்கூடும்.
பல் வலி, சொத்தை, ஈறுகளில் வலி, வீக்கம் உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை அவை உண்டாக்கலாம். அவற்றைத் தடுக்க வாயில் எண்ணெய்க் கொப்பளித்தல் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பலருக்கும் பெரும் தலைவலியாக உள்ள வாய் துர்நாற்றத்தையும் எண்ணெய்க் கொப்பளித்தல் குறைக்கிறது. பற்கள் இயற்கையாக வெண்மை பெறவும், உடலில் ஏற்படும் அழற்சியையும் எண்ணெய்க் கொப்பளித்தல் குறைப்பதாக நம்பப்படுகிறது.
தேங்காய் எண்ணெய், நெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு வாயைக் கொப்பளிக்கலாம்.
பொதுவாகவே, இரவில் தூங்கி காலையில் விழிக்கும் போது நமது உடல் சூடாக இருக்கும்.
குறிப்பாக நல்லெண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். முகம் பளபளப்பாகவும் இருக்கும்.
சூட்டினால் உண்டாகும் கண் எரிச்சல், வாய்ப்புண் குணமாகும். இரவில் தூக்கமில்லாமல் அவதிப் படுபவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வாயில் எண்ணெய்யால் கொப்பளிப்பது அவசியம். ஒன்று ஒன்று அல்லது இரண்டு மேசைக் கரண்டி எண்ணெய்யை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாய்க்குள் வைத்து கொப்பளிக்க வேண்டும்.
எண்ணெய்யின் தன்மை மாறி, வெள்ளை நிறத்தில் லேசான நுரையோடு, பிசுபிசுப்பின்றி மாறும் வரை வாய்க்குள் கொப்பளிக்க வேண்டும். அ
தன் பிறகு அதை முழுவதுமாக வெளியே துப்பிவிட்டு, வாய்க்குள் தண்ணீர் விட்டு மீண்டும் கொப்பளித்து, சுத்தம் செய்ய வேண்டும்.
வாயில் எண்ணெய் வைத்துக் கொப்பளித்த பிறகு அதை நன்றாக தண்ணீர் விட்டு அலசுவது முக்கியம்.
எண்ணெய் கொப்பளித்த உடனேயே பல் துலக்க வேண்டாம். வாயில் கொப்பளித்த எண்ணெய்யை விழுங்கக்கூடாது. அதை துப்பிவிட வேண்டும்.

