மோனலிசா
லிட்டில் இந்தியா வர்த்தகர் களிடையே மின்னிலக்கமயத்தை அதிகரிக்கும் நோக்கில் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் பிரபல மின்வர்த்தக தளமான லஸாடாவுடன் புரிந்துணர்வு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய மரபுடைமைச் சங்கத்தில் கடந்த சனிக்கிழமை காலை அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
லஸாடாவின் தலைமை நிர்வாக அதிகாரி லோ வீ லீயும் லிஷாவின் செயலாளர் பா. ருத்திராபதியும் இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டனர்.
"இம்முயற்சியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய அனைத்து பொருள்களையும் வீட்டிலிருந்தபடியே வாங்க இயலும். லஸாடா ஆறு நாடுகளில் செயல்படுகிறது. இதனால் நமதுவர்த்தகர்களின் பொருட்களை பிற நாட்டினர் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த வாய்ப்பை அனைத்து வர்த்தகர்களும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்," என்று திரு ருத்திராபதி கூறினார்.
லிஷாவில் ஏறத்தாழ 1,000 வர்த்தகர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 624 வர்த்தகர்கள் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"லிட்டில் இந்தியா வர்த்தகர் களுக்குப் பயன்படும் வகையில் லஸாடா தளத்தில் அவர்களுக்கென்று பாதை உருவாக்கப்பட்டு அவர்களுடைய பொருட்கள் இணையம் மூலம் விற்கப்படும்.
"வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து அதன் விலையை பிற கடைகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கும் வசதியும் இருக்கும்," என்று லிஷாவின் துணை தலைவர் ராஜ்குமார் சந்திரா தெரிவித்தார்.
"சிங்கப்பூரில் 5000க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் 20 விழுக்காட்டினர் மட்டுமே இணைய வர்த்தகத்தில் இணைந்துள்ளன.
"இன்றைய நவீன சூழலில் அதிக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாக மாறுவது அவசியம். அவ்வகையில் லிஷா அமைப்புடன் கைகோர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்," என்று திரு லோ குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் 57ஆவது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் ஃபூவ்சோ மெத்தடிஸ்ட் பாலர்பள்ளி மாணவர்கள் தேசிய கீதத்தை பாடியும் உறுதிமொழியை ஒப்புவித்தும் நடனம் ஆடியும் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

