நீண்டநேரம் உடற்பயிற்சி செய்வதைக் காட்டிலும் சிறிது நேரம் செய்யும் அன்றாட நடவடிக்கை அதிக பயனளிக்கும் என்று புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
உடல்நலத்தில் அதிக அக்கறை உள்ளவர்கள் பலருக்கும் இருக்கும் கேள்விக்கு ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு விடையளிக்கிறது.
சிறிது நேரம் மேற்கொள்ளும் அன்றாடச் செயல்பாடே, குறைந்தது தசைவலிமைக்கேனும் அதிக பயன் தரும் அணுகுமுறையாக இருக்கும் என்பதை அந்த ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
அந்த ஆய்வின்படி, அப்படிக் கூடுதல் பயன்பெற நாள்தோறும் மலையளவிற்கு வேலை செய்ய வேண்டியதில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி.
ஜப்பானின் நிகாட்டா பல்கலைக்கழகம், நிஷி கியுஷு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த நான்கு வார ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றோர் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். அவர்கள் கைகளுக்கான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு, தசை வலிமையும் அளவும் அளவிடப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டது.
உடற்பயிற்சிக்கூடத்தில் கைகளில் எடையைப் பிடித்துக்கொண்டு மடக்கி நீட்டுவது போன்ற உடற்பயிற்சிக்குப் பங்கேற்பாளர்கள் உட்படுத்தப்பட்டனர்.
இரண்டு பிரிவினர் வாரந்தோறும் 30 முறை அவ்வாறு கைகளை மடக்கி நீட்டும் பயிற்சியை மேற்கொண்டனர். அவர்களில் ஒரு பிரிவினர் வாரத்தில் ஆறு நாள்களுக்கு அன்றாடம் ஐந்து முறை அப்படிக் கைகளை மடக்கி நீட்டும் பயிற்சியை மேற்கொண்டனர்; இன்னொரு பிரிவினர் ஒரே நாளில் அப்படி 30 முறை கைகளை நீட்டி மடக்கினர்.
மூன்றாவது பிரிவினர் வாரத்தில் ஒருநாள் மட்டும் ஆறுமுறை அப்படிக் கைகளை மடக்கி நீட்டும் பயிற்சியைச் செய்தனர்.
நான்கு வாரங்களுக்குப் பிறகு அம்மூன்று பிரிவினரும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டனர்.
ஒரே நாளில் 30 முறை அப்பயிற்சி செய்தவர்களின் தசை வலிமையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. அதே நேரத்தில், அவர்களிடத்தில் தசையின் அளவு 5.8% கூடியிருந்தது.
ஒரே ஒருநாள் மட்டும் ஆறுமுறை அப்பயிற்சியைச் செய்தவர்கள் தசை வலிமை, அளவு என இரண்டிலும் எந்த மாற்றமும் இல்லை.
இருப்பினும், வாரம் ஆறு நாள்களுக்கு நாள்தோறும் ஐந்து முறை கைகளை நீட்டி மடக்கும் பயிற்சி செய்தவர்களின் தசை வலிமை 10% கூடியிருந்தது. அதேபோல, தசை அளவு அதிகரிப்பும் ஒரே நாளில் 30 முறை பயிற்சி செய்தவர்களுக்கு ஒப்பாக இருந்தது.
மிகக் குறைந்த அளவு உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதும், அது ஒருவரின் உடல் வலிமையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி, விளையாட்டு அறிவியல் பேராசிரியர் கென் நொசாகா தெரிவித்தார்.
"உடல் வலுப்பெற உடற்பயிற்சிக்கூடத்தில் மிகுந்த நேரம் செலவிட வேண்டும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால், உண்மை அதுவன்று. எடைமிக்க 'டம்பெல்'லைக் கையில் பிடித்துக்கொண்டு, அன்றாடம் ஒன்று முதல் ஆறுமுறை தூக்கி, இறக்கினாலே போதும்," என்றார் பேராசிரியர் நொசாகா.
தங்களது ஆய்விற்கு 'பைசெப் கர்ல்' எனப்படும் மேற்கை உட்தசையை மடக்கி நீட்டும் பயிற்சியை மட்டுமே பயன்படுத்தியபோதும், மற்ற தசைகளுக்கும் இது பொருந்தும் என்று தாங்கள் நம்புவதாக அவர் சொன்னார்.
"நாம் உடல்நலத்துடன் இருக்க வலுவான தசை முக்கியம். முதுமையடையும்போது தசையளவும் வலிமையும் குறைவதைத் தடுக்க இது உதவும். இதய நோய், இரண்டாம் வகை நீரிழிவு, சிலவகைப் புற்றுநோய்கள், நினைவாற்றல் இழப்பு, எலும்பு மெலிதல் (ஆஸ்டியோபொரோசிஸ்) போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட தசை அளவு குறைவதே காரணம்," என்று அவர் கூறினார்.

