வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, தோலைக் குப்பையில் வீசுபவரா நீங்கள்? அண்மைய ஆய்வு முடிவுகளைத் தெரிந்துகொண்டால் இனி அவ்வாறு செய்யுமுன் நீங்கள் சிந்திப்பீர்.
இனிப்புப் பண்டங்களுக்கான பிசைந்த மாவுடன் வாழைப்பழத் தோல் பொடியைச் சேர்க்கும்போது அப்பண்டங்களின் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வெறும் கோதுமை மாவில் செய்யும் இனிப்புப் பண்டங்களைக் காட்டிலும் அதனுடன் சிறிது வாழைப்பழத் தோல் பொடியைச் சேர்க்கும்போது அவற்றின் சுவையும் கூடுகிறது.
'ஏசிஎஸ் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப' சஞ்சிகையில் இதுகுறித்த ஆய்வுக்கட்டுரை வெளியாகியிருக்கிறது.
இப்போதைய காலகட்டத்தில் தாவர உணவுகளுக்கு மாறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வகையில், காய்கனிகளின் ஒவ்வொரு பகுதியையும் உணவாகப் பயன்படுத்துவது குறித்து புதுமையான வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர்.
வாழைப்பழத் தோலைப் பொடியாக அரைத்துப் பயன்படுத்தலாம். அதில் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், ஆன்டிஆக்சிடன்ட் ஆகிய சத்துகள் மிகுதியாக இருக்கின்றன.
இந்நிலையில், ரொட்டி, கேக்குகளுக்கான மாவுடன் சேர்க்கும் கோதுமை மாவின் அளவைச் சற்றுக் குறைத்து, அதற்குப் பதிலாக வாழைப்பழத் தோல் பொடியைச் சேர்த்து ஆய்வாளர்கள் சோதித்துப் பார்த்தனர்.
ஆய்வாளர்கள் பழுத்த வாழைப்பழங்களின் தோலை உரித்து, அவற்றைக் கொதிநீரில் போட்டு எடுத்து, காய வைத்தனர். பின்னர் அவற்றை அரைத்துப் பொடியாக்கினர்.
பின்னர் வெண்ணெய், கொழுப்பு நீக்கிய பால் மாவு, சர்க்கரை, தாவர எண்ணெய், கோதுமை மாவு ஆகியவற்றுடன் வெவ்வேறு அளவுகளில், அதாவது 0%-15% வரை வாழைப்பழத் தோல் பொடியைக் கலந்து, ஐந்து தொகுதிகளாகப் பிரித்து, அவற்றை வேகவைத்தனர்.
வாழைப்பழத் தோல் பொடியின் அளவு அதிகமாக இருந்த தொகுதிகள் பழுப்பு நிறத்துடனும் கடினமானதாகவும் இருந்தன. அதற்கு வாழைப்பழத் தோலில் இருக்கும் அதிக நார்ச்சத்தே காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
அதிக 'ஃபீனால்'களும் 'ஆன்டிஆக்சிடன்ட்'களும் உள்ளதால் வாழைப்பழத் தோல் சேர்த்த இனிப்புப் பண்டங்கள், வழக்கமான பண்டங்களைவிட சத்துமிக்கதாக இருந்தன. மேலும், அவற்றில் கொழுப்பு, புரதச்சத்தின் அளவும் குறைவாக இருந்தது.
வாழைப்பழத் தோல் பொடி நடுத்தர அளவில், அதாவது 7.5% சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள் நயமிக்கதாகவும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
மூன்று மாதங்கள் அவற்றை அறைவெப்பநிலையில் வைத்து இருந்த பின்னும் அவற்றின் சுவை குறையவில்லை.

