தனிமையை உணர்வது எதிர்கால வேலைவாய்ப்பைப் பெரிதும் பாதிக்கலாம் என்று புதிய ஆய்வு முடிவு கூறுகிறது.
அடிக்கடி தனிமையில் இருப்பதுபோல் உணர்வதாகக் கூறுபவர்கள், பிற்காலத்தில் வேலையை இழக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று அந்த ஆய்வு சொல்கிறது.
இங்கிலாந்தின் எக்செட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர் குழு மேற்கொண்ட இந்த ஆய்வு குறித்த கட்டுரை 'பிஎம்சி பொதுச் சுகாதார' சஞ்சிகையில் வெளியாகி இருக்கிறது.
வேலையின்றி இருப்பது தனிமையில் தள்ளிவிடலாம் என்று முன்னைய ஆய்வு நிறுவியிருக்கிறது. இந்நிலையில், தனிமையில் இருப்பது வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று இப்போது ஆராயப்பட்டது.
இதன் தொடர்பில் ஆய்வுக் குழுவின் தலைவரான நியா மோரிஸ் கூறுகையில், "தனித்திருப்பதும் வேலையின்றி இருப்பதும் உடல்நலத்திலும் பொருளியலிலும் அஞ்சத்தக்க விளைவுகளை ஏற்படுத்திவிடலாம். அதனால், தனித்திருப்பதைக் குறைப்பது வேலையின்மையைக் குறைக்கும்; வேலையில் இருப்பது தனிமை உணர்வைக் குறைக்கும். இவற்றின் விளைவாக, உடல்நலம், மனநலம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பிற அம்சங்களும் மேம்படும்," என்றார்.
"ஆதலால், தனிமையில் இருப்பதாக உணர்வோரின் நலத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்தும் வகையில், அவர்கள்மீது நிறுவனங்களும் அரசாங்கமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எங்களது ஆய்வு பெரும்பாலும் கொவிட்-19 பரவலுக்கு முன்பே இடம்பெற்றது. இந்நிலையில், வீட்டிலிருந்து வேலை செய்வது அதிகமாகியுள்ள நிலையில், பலரும் தனிமையுணர்வை அனுபவித்துவர அதிக வாய்ப்புள்ளதால் இந்த விவகாரம் மேலும் மோசமாகி இருக்கக்கூடும்," என்றும் திருவாட்டி நியா கூறினார்.
ஆய்வில் பங்கேற்ற 15,000க்கும் மேற்பட்டோர் அளித்த தரவுகளை ஆய்வுக்குழுவினர் பகுப்பாய்வு செய்தனர்.
வயது, பாலினம், இனம், கல்வி, திருமண நிலை, குடும்ப அமைப்பு, குழந்தைகள், வட்டாரம் போன்ற பல காரணிகளை ஆய்வாளர்கள் கருத்தில்கொண்டனர்.
"தனிமை என்பது நம்ப முடியாத அளவிற்கு, முக்கியமானதொரு சமூகப் பிரச்சினையாக விளங்குகிறது. பெரும்பாலும் அது மனநலத்திலும் நல்வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. ஆனால், அதன் தாக்கம் பரந்த அளவில் இருக்கலாம் என்பதையும் அது தனிமனிதர்களிடத்திலும் பொருளியலிலும் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பதையும் எங்களது கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இது குறித்து மேலும் ஆராய வேண்டி இருக்கிறது," என்று மூத்த ஆய்வாளரான பேராசிரியர் அன் டோனிட்டா மெடினா லாரா கூறினார்.
"வேலையின்மை, தனிமை உணர்வை ஏற்படுத்தக்கூடும் என முன்னைய ஆய்வு மெய்ப்பித்துள்ள நிலையில், தனிமை உணர்வை அனுபவிப்பவர்கள், அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் தங்களது வேலையை இழக்க வாய்ப்புள்ளதை முதன்முறையாக நாங்கள்தான் அடையாளம் கண்டுள்ளோம்," என்றார் ஆய்வாளர்களில் ஒருவரான இணைப் பேராசிரியர் டாக்டர் ரூபன் முய்க்கா மோட்டா.
இவ்விரு விவகாரங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டு, ஒரு எதிர்மறைச் சுழற்சியை ஏற்படுத்திவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

