அனைவரின் கைகளிலும் கைப்பேசி தவழும் இக்காலத்தில், எல்லா வயதினரும் பயன்படுத்தும் காணொளி இணையத்தளமாக 'யூடியூப்' திகழ்கிறது.
அனைத்து வயதினருக்குமான காணொளிகள் அதில் உலா வருகின்றன. அதனால் தங்கள் குழந்தைகள் தகாத காணொளிகளைக் காண நேரிடுமா என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில், யூடியூப்பில் பெரியவர்களுக்கான காணொளிகளைப் பார்க்கவிடாமல் தடுத்து, அதனைக் குழந்தைகளுக்கு உகந்த காணொளித்தளமாக மாற்ற இயலும்.
'கட்டுப்படுத்தப்பட்ட முறைமையை (restricted mode)' தெரிவு செய்வதன்மூலம் பெரியவர்களுக்கான காணொளிகளைக் குழந்தைகள் காண முடியாதபடி தடுக்கலாம்.
குழந்தைகள் கணினி அல்லது மடிக்கணினி அல்லது திறன்பேசி வழியாக யூடியூப் காணொளித்தளத்தைப் பயன்படுத்தலாம். அப்படி இருந்தால், ஒவ்வொரு கருவியிலும் தனித்தனியாக, அவர்கள் பெரியவர்களுக்கான காணொளிகளைப் பார்க்க முடியாதபடி 'கட்டுப்படுத்தப்பட்ட முறைமை'யைச் செயல்படுத்த வேண்டும்.
கணினிகளுக்கான வழிமுறை:
1. யூடியூப் இணையத்தளத்தைத் திறக்கவும்.
2. வலது மூலையில் இருக்கும் 'புரொஃபைல்' படவுருவைச் சொடுக்கவும்.
3. அதிலுள்ள 'ரெஸ்டிரிக்டட் மோட்' எனும் அம்சத்தைச் சொடுக்கவும்.
4. 'ஆக்டிவேட் ரெஸ்டிரிக்டட் மோட்' என்பதைத் தெரிவுசெய்யவும்.
திறன்பேசிகளுக்கான வழிமுறை:
1. திறன்பேசியில் யூடியூப் செயலியைத் திறக்கவும்
2. 'செட்டிங்ஸ்' அமைப்பில் உள்ள 'ஜெனரல்' என்பதைச் சொடுக்கவும்.
3. அதிலுள்ள 'ரெஸ்டிரிக்டட் மோட்' எனும் அம்சத்தைச் சொடுக்கவும்.
4. 'ஆக்டிவேட் ரெஸ்டிரிக்டட் மோட்' என்பதைத் தெரிவுசெய்யவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளை ஒருவர் பயன்படுத்தினால், அவை ஒவ்வொன்றிலும் இந்தக் கட்டுப்பாட்டைச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

