ஹராரே: ஸிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
முதலிரு போட்டிகளில் இரண்டாவதாகப் பந்தடித்த லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய அணி, நேற்று முன்தினம் நடந்த கடைசி, 3வது போட்டியில் முதலில் பந்தடித்தது.
ராகுல் (30)-தவான் (40) இணை சிறப்பான தொடக்கம் அமைத்துத் தந்தனர். ராகுல் ஆட்டமிழந்தபின் களமிறங்கிய இளம் வீரர் ஷுப்மன் கில் முதலிலிருந்தே அதிரடியாக ஆடினார். 82 பந்துகளில் சதமடித்த இவர், 130 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 50 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைச் சேர்த்தது.
இலக்கை விரட்டிய ஸிம்பாப்வே அணியில் ஒருபக்கம் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தபோதும் சிக்கந்தர் ரஸா பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடி, இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாகத் திகழ்ந்தார். ஒன்பது பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் அவர் 110 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஸிம்பாப்வே அணியின் வெற்றிக் கனவும் கலைந்தது.
இறுதியில் அவ்வணி 276 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 13 ஓட்டங்களில் தோற்றுப்போனது.

