சீனாவில் ஆறுகள், கிளை நதிகள், ஏரிகள் பலவற்றிலும் நீரின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது. ஆற்றுப்படுகைகள், அவற்றில் உள்ள பாறைகள், ஆற்றில் மூழ்கியிருந்த சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கற்சிலைகள் எனப் பலவும் புலப்படுகின்றன.
யாங்ச ஆற்றிலும் அதன் நீரோட்டத்தால் நிரம்பிய டோங்டிங் போன்ற பாசன ஏரிகளிலும் நீர் வற்றி நிலப்பரப்பே பெரும்பாலும் காட்சிஅளிக்கிறது.
பல பகுதிகளில் காட்டுத் தீச்சம்பவங்கள், 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை ஆகியவை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்சாரத் தடையைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரான்சில் 1958ல் வானிலை நிகழ்வுகளின் பதிவு தொடங்கிய காலத்தில் இருந்து ஆக மோசமான வறட்சி நிலவுகிறது. வடக்கு இத்தாலியில் 70 ஆண்டு காணாத வறட்சி. அமெரிக்காவில் 43 விழுக்காட்டு மாநிலங்களில் வறட்சி என்று எங்கு பார்த்தாலும் தண்ணீர்த் தட்டுப்பாட்டின் அவலக் குரல்கள் ஒலிக்கின்றன. பொதுவில் ஐரோப்பாவில் 500 ஆண்டில் இல்லாத அளவு மோசமான வறட்சி நிலவுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு ஆய்வு நிலையம் கூறியிருக்கிறது.
இத்தாலியின் ஆகப் பெரிய நதியான போ, முக்கியமாக போக்குவரத்து நீர்ப் பாதையாக வரலாற்றின் ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறுகளின் அரசன் எனப்படும் இந்த நதியில் இப்போது கடும் வறட்சியால் நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டுகள் ஆற்றுப்படுகையில் காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 17 மில்லியன் பேர் இந்த ஆற்றின் கரையோரத்தில் வசிக்கின்றனர். நாட்டின் கால்நடைகளில் பாதிக்கும் மேல் இதைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் பேணப்படுகின்றன.
மிக மோசமான வறட்சியை முன்னிட்டு இத்தாலிய அரசாங்கம் சென்ற மாதம் ஐந்து வட்டாரங்களில் நெருக்கடி நிலையை அறிவித்தது.
மழையின் அளவு குறைந்ததும் உலக வெப்பநிலை உயர்ந்து வருவதும் இதற்கான முக்கியக் காரணங்கள் என்று கருதப்படுகிறது. இது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் என்பதில் சந்தேகம் இல்லை என்று இத்தாலியப் பிரதமர் கூறி உள்ளார்.
அண்டை நாடான பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை. சோள விளைச்சல் சென்ற ஆண்டைக் காட்டிலும் 20 விழுக்காடு குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
போலந்தில் ஏறக்குறைய 99 விழுக்காட்டுப் பகுதிகளில் கடுமையான வறட்சி வாட்டுகிறது. ருமேனியாவின் முக்கால்வாசிப் பகுதியில் வறட்சி.
இங்கிலாந்தில் 2025க்குள் சில ஆறுகளில் கோடைக்காலங்களில் நீரின் அளவு 80 விழுக்காடு குறையக்கூடும் என்றும் வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆப்பிரிக்காவிலும் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இதனால் எத்தியோப்பியா, சோமாலியா, கென்யாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் 18 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கடும் பட்டினியால் வாடுகின்றனர்.
உலகின் பல பகுதிகளையும் வாட்டும் வறட்சியால் தண்ணீர்த் தட்டுப்பாடு மட்டுமின்றி நீர்வழிப் போக்குவரத்து, நீர் மின்சார உற்பத்தி, பயிர் விளைச்சல் போன்றவையும் பாதிக்கப்படுகின்றன.
உலகில் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு வறட்சி ஏற்படும் இடைவெளியும் அது நீடிக்கும் காலகட்டமும் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
உலகெங்கும் 229 மில்லியன் ஏக்கர் விளைநிலங்களில் உள்ள பயிர்களும் 130 மில்லியன் மக்களும் வறட்சியை எதிர்கொள்வதாக மதிப்படப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிக்கும் நடவடிக்கைகளை அதிகரிப்பதே இதற்கான தீர்வு. இதேநிலை தொடர்ந்தால் 2050க்குள் உலகின் முக்கால்வாசிப் பகுதிகள் வறட்சியால் வாட நேரிடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

