எந்த வயதிலும் சாதனை புரியலாம் என்பதற்கு 100 வயது டாக்டர் ஹாவர்ட் டக்கர், 17 வயது மேக் ரதர்ஃபோர்ட் ஆகிய இருவரையும் சொல்லலாம்.
பணியில் உள்ள ஆக வயதான மருத்துவர் என்ற அங்கீகாரத்தை 2021ல் உலக கின்னஸ் பதிவுகள் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் டக்கருக்கு வழங்கியது. பிரிட்டிஷ்-பெல்ஜிய இளையரான மேக் ரதர்ஃபோர்ட், விமானத்தில் தனியே உலகைச் சுற்றி வந்த ஆக இளையவர் என்ற பெருமையைக் கடந்த புதன்கிழமையன்று பெற்றார்.
தரையிறங்கியதும் "இளையர்களால் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்பதைத்தான் இந்தப் பயணத்தின் மூலம் நான் காட்ட விரும்புகிறேன். உங்களின் கனவுகளை நனவாக்க முயலுங்கள்," என்றார் மேக்.
இவர் 221 மணிநேரத்தில் 30 நாடுகளைக் கடந்து 54,000 கி.மீ தூரம் பறந்துள்ளார். ஒரு கட்டத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் தான் போராட வேண்டியிருந்தது என்று கூறினார் அவர்.
அமெரிக்காவின் ஒஹாயோவைச் சேர்ந்த டாக்டர் டக்கர், மருத்துவப் பணிக்காக செலவிட்ட காலம் 75 ஆண்டுகளாம். வயது முதிர்ச்சியைத் தாமதமாக்கும் தம் வாழ்க்கைமுறையைப் பற்றி இவர் கூறுகிறார். தம் வேலையை விரும்பிச் செய்வதாக டாக்டர் டக்கர் தெரிவித்தார். ஓய்வு பெறுவது என்பது தம் பட்டியலில் அறவே இல்லை என்றும் கூறுகிறார் டக்கர்.
"நீண்ட ஆயுளுக்கு எதிரி ஓய்வுகாலம்தான். ஓய்வு பெறும் ஒருவர் கூனிக் குறுகி ஒரு தாதிமை இல்லத்தில் சேரும் சாத்தியத்தை நினைத்துப் பார்க்கவேண்டும். அப்படி ஓய்வு பெறுவதாக இருந்தால் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு தேவை. அது தினமும் மூளைக்குப் பயிற்சி அளிப்பதாக அமைய வேண்டும்," என்று எச்சரித்தார் அவர்.
இளையர் மேக் கூறியது போல் டாக்டர் டக்கரும் தம் கனவுகளை விடாமல் துரத்துகிறார். மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல், 67 வயதில் ஒஹாயோ மாநில வழக்கறிஞர் தேர்விலும் தேறினார்.
புகைப்பிடிக்கும் பழக்கமே இல்லாத டாக்டர் டக்கர், தம் ஆரோக்கிய வாழ்க்கைமுறையில் உடற்பயிற்சி ஒரு முக்கியக் கூறு என்கிறார். இறப்பதைப் பற்றி யோசிக்காமல், வாழ்வதில் மட்டுமே தற்போது கவனம் செலுத்துவதாக டாக்டர் டக்கர் குறிப்பிடுகிறார்.
"இறப்பு என்பது ஒரு முறைதான் நிகழும். ஆனால் வாழ்க்கை என்பது தினமும் நிகழ்வதாகும். அதில் கவனம் செலுத்துவோம்," என்கிறார் இவர்.
இவ்வாறு அதிக நம்பிக்கையான மனப்போக்குடன் வாழ்க்கையைப் பார்க்கும் ஆண்களும் பெண்களும் தங்களின் ஆயுள்காலத்தை 11% முதல் 15% வரை நீட்டிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இறுதியாக, சரியான வாழ்க்கைத் துணை கிடைத்தால் முதிர்ச்சி காலத்தைச் தள்ளிப் போடலாம் என்கிறார் இவர். தம் 89 வயது மனைவியுடன் 65 ஆண்டுகளாக இருக்கும் டக்கர், நான்கு பிள்ளைகளுக்கு அப்பா, 10 பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தா.
செய்தி: இணையம்,
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

