சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கம்பன் விழா, வரும் சனிக்கிழமை செப்டம்பர் 3ஆம் தேதி மாலை மணி 6 மணி முதல் 9 மணி வரை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற உள்ளது.
விழாவில் 'ரோசஸ் ஆஃப் தி பீஸ் நிறுவனரும் நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான திரு முகமது இர்ஷாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
சிறப்பு அங்கமாக "இராமனுக்குப் பெரிதும் ஏற்றம் தந்தவர்கள் உடன்பிறந்த தம்பியரா? (பரதன், இலக்குவன், சத்துருக்கன்) உடன்பிறவாத் தம்பியரா? (குகன், சுக்கிரீவன், வீடணன்)" எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடக்கும். சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் ந. செல்லக்கிருஷ்ணன் நடுவராக இருப்பார்.
"உடன்பிறந்த தம்பியரே" என்னும் தலைப்பில் முனைவர் இரத்தின வேங்கடேசன் தலைமையில் கண்ணன் வைஷ்ணவி, முனைவர் ராஜி சீனிவாசன் ஆகியோர் வாதிடுவர். தலைப்பை வெட்டி முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் தலைமையில் வானதி பிரகாஷ், முனைவர் க. இராஜகோபாலன் ஆகியோர் வாதிடுவர்.
கம்பன் விழாவை ஒட்டி கம்பன் கவிதைகளில் மாணவர் களுக்கு 'கஹூட்' இணையத்தளம் வழியாகப் புதிர்ப் போட்டி நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

