ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
துபாய்: இறுதிவரை பரபரப்பாக இருந்த ஆட்டத்தில், பதற்றமின்றி ஆடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் ஹார்திக் பாண்டியா.
இதனையடுத்து, துபாயில் நடந்துவரும் ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் தனது முதல் ஆட்டத்திலேயே பரம எதிரியான பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
மொத்தம் ஆறு அணிகள் இரு பிரிவுகளாகப் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் 'ஏ' பிரிவிலும் ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை அணிகள் 'பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
கடந்த சனிக்கிழமை நடந்த முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கையை மிக எளிதாக வெற்றிகொண்டது.
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.
இந்திய அணியில் இளம் விக்கெட்காப்பாளர் ரிஷப் பன்ட்டுக்குப் பதிலாக அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தரப்பட்டது.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா, முதலில் தமது அணி பந்துவீசும் என அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் தொடக்கப் பந்தடிப்பாளர்களாக அணித்தலைவர் பாபர் ஆசமும் முகம்மது ரிஸ்வானும் களமிறங்கினர்.
சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசமை 10 ஓட்டங்களில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார்.
'பவர் பிளே'வான முதல் ஆறு ஓவர்களுக்குள் பாகிஸ்தான் மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. தமது பந்தில் சிக்சர் விளாசிய ஃபகர் ஸமானை ஆட்டமிழக்கச் செய்து, பழிதீர்த்துக்கொண்டார் இளம் வேகப் பந்துவீச்சாளரான ஆவேஷ் கான்.
இப்திகார் அகமது (28), முகம்மது ரிஸ்வான் (43) இருவரும் சற்று நம்பிக்கை அளித்தனர். ஆனாலும், இந்திய வீரர்களின் அருமையான பந்துவீச்சால் ஒரு கட்டத்தில் 97 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த பாகிஸ்தான், பின்னர் 19.5 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இலக்கை விரட்டிய இந்திய அணிக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. லோகேஷ் ராகுல் தாம் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். ரோகித் 12 ஓட்டங்களையும் 100வது டி20 போட்டியில் ஆடிய விராத் கோஹ்லி 35 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 18 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதனால் சற்று நிமிரத் தொடங்கிய பாகிஸ்தானுக்குப் பெரும் சோதனையாக விளங்கியது ஜடேஜா-பாண்டியா இணையின் ஆட்டம். இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 52 ஓட்டங்களைக் குவித்தனர். கடைசி ஓவரில் ஏழு ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் ஜடேஜா (35). ஆனாலும், 4வது பந்தில் சிக்சர் விளாசி, இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இவர் 18 பந்துகளில் 33 ஓட்டங்களைக் குவித்தார்.
அடுத்ததாக, நாளை இரவு நடக்க இருக்கும் ஆட்டத்தில் ஹாங்காங்குடன் இந்தியா பொருதவுள்ளது.

