மான்செஸ்டர்: நெதர்லாந்தின் அயக்ஸ் காற்பந்துக் குழுவிற்காக விளையாடிவரும் பிரேசில் ஆட்டக்காரர் ஆன்டனி (படம்) விரைவில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடன் இணையவுள்ளார்.
இவருக்காக தொடக்கத்தில் 80.25 மில்லியன் பவுண்டும் (S$131 மி.) அதன்பின் 4.25 மில்லியன் பவுண்டும் தர யுனைடெட் குழு இணங்கியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.
யுனைடெட் குழுவின் இரண்டாவது ஆக விலைமதிப்புமிக்க வீரர் என்ற பெருமையை ஹேரி மெக்வாயருடன் பகிர்ந்துகொள்வார் ஆன்டனி. அண்மையில் இத்தாலியின் யுவென்டஸ் குழுவுடன் மீண்டும் இணைந்த பிரான்சின் பால் போக்பா, யுனைடெட் குழு ஒப்பந்தம் செய்த வீரர்களில் ஆக விலைமதிப்புமிக்கவர். யுனைடெட் அவருக்காக 89 மி. பவுண்டு விலைகொடுத்திருந்தது.
அடுத்த இரு நாள்களுக்குள் ஆன்டனி மான்செஸ்டருக்கு வந்து, மருத்துவச் சோதனையில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு அயக்ஸ் குழுவுடன் இணைந்த 22 வயது ஆன்டனி, இதுவரை அக்குழுவிற்காக 82 ஆட்டங்களில் விளையாடி 25 கோல்களை அடித்துள்ளார்; 22 கோல்களைப் போட துணைபுரிந்துள்ளார்.
சென்ற ஆண்டு அக்டோபரில் பிரேசில் சார்பில் அனைத்துலகப் போட்டிகளில் அறிமுகமான இவர், இதுவரை அக்குழுவிற்காக ஒன்பது ஆட்டங்களில் இரண்டு கோல்களைப் போட்டுள்ளார்.
இதனிடையே, நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து இரண்டாவது ஆட்டமாக முதல் 11 வீரர்களில் ஒருவராகக் களமிறக்கப்படாததால் அவர் யுனைடெட்டைவிட்டு வெளியேறக்கூடும் என்ற பேச்சு அடிபடுகிறது.

