நாட்டிங்ஹம்ஷியர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் அதிக கோலடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திற்குக் குறிவைத்துள்ளார் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிற்காக விளையாடிவரும் நட்சத்திர ஆட்டக்காரர் ஹேரி கேன்.
நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த இரண்டு கோல்களையும் கேன்தான் போட்டார்.
இதன்மூலம் பிரிமியர் லீக்கில் இவரது கோல் எண்ணிக்கை 187ஆக உயர்ந்தது. 29 வயதான கேன், இப்போது பிரிமியர் லீக்கில் அதிக கோலடித்தோர் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறார்.
ஆலன் ஷியரர் (260), வெய்ன் ரூனி (208) இருவரும் முறையே முதலிரு இடங்களில் உள்ளனர்.
"முதலிடம் வெகுதொலைவில் உள்ளது. ஆனாலும், நான் இன்னும் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்வதால், என்னால் இன்னும் பல ஆண்டுகளுக்கு விளையாட முடியும் என நினைக்கிறேன். அதனால் இன்னும் சிறப்பாக விளையாடி, கோல் பட்டியலில் மேலும் முன்னேற முயல்வேன்," என்றார் கேன்.
லீக் போட்டிகளில் ஒரே குழுவிற்காக அதிக கோல்களைப் போட்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த செர்ஜியோ அகுவேரோவை (184) கடந்த வாரம் கேன் பின்னுக்குத் தள்ளியது குறிப்பிடத்தக்கது.
நடப்புப் பருவத்தில் கேன் இதுவரை நான்கு ஆட்டங்களில் நான்கு கோல்களை அடித்துள்ளார்.
இதனிடையே, நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவை வீழ்த்தியதன்மூலம் புள்ளிப் பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது ஸ்பர்ஸ் குழு. 2009-10 பருவத்திற்குப் பிறகு இதுவே அக்குழுவின் ஆகச் சிறந்த தொடக்கம். இதனையடுத்து, இப்பருவத்தில் அக்குழு மேலும் முன்னேறிச் செல்ல கேனின் செயல்பாடு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஸ்பர்ஸ் நிர்வாகி கோன்டேயின் கருத்தும் இதையே எதிரொலித்தது.
"ஆட்டத்தின் எந்தவொரு நேரத்திலும் அவரே எங்களின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார். அவரது செயல்பாடு எனக்கு மகிழ்ச்சி தருகிறது," என்றார் கோன்டே.

