பாரிஸ்: பல மில்லியன் யூரோ பணம் கேட்டு, தம்மை ஒரு கும்பல் மிரட்டுவதாக முன்னணி பிரெஞ்சுக் காற்பந்து வீரர் பால் போக்பா (படம்) கூறியுள்ளதைத் தொடர்ந்து, பிரெஞ்சுக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்தக் கும்பலில் பால் போக்பாவின் சகோதரர் மத்தியாஸ் போக்பாவும் அடங்குவார்.
தற்போது இத்தாலியின் யுவென்டஸ் குழுவிற்காக விளையாடிவரும் பால் போக்பா குறித்த சில பரபரப்பான தகவல்களை வெளியிடவிருப்பதாக பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய நான்கு மொழிகளில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார் மத்தியாஸ் போக்பா.
கடந்த சனிக்கிழமை வெளியான அந்தக் காணொளிகளால் எந்த வியப்பும் அடையவில்லை என்று போக்பாவின் தாயார், அவரின் தற்போதைய முகவர், அவரின் வழக்கறிஞர்கள் ஆகியோர் கையெழுத்திட்ட அறிக்கை கூறுகிறது.
தம் சிறுவயது நண்பர்களாலும் முக்காடு அணிந்து, கையில் துப்பாக்கி ஏந்தியிருந்த மேலும் இருவராலும் தாம் மிரட்டப்பட்டதாக விசாரணை அதிகாரிகளிடம் போக்பா கூறியதாக 'பிரான்ஸ் இன்ஃபோ' செய்தி தெரிவிக்கிறது. அக்காணொளிகளை வெளியிடக்கூடாது எனில், போக்பா 13 மில்லியன் யூரோ (S$18 மி.) தர வேண்டும் என்று அவர்கள் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.
2018ல் உலகக் கிண்ணம் வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த போக்பா, கடந்த ஆறாண்டுகளாக மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்காக விளையாடினார்.

