பார்சிலோனா: முன்னணி ஸ்பானியக் காற்பந்துக் குழுவான பார்சிலோனாவிற்காக விளையாடிவரும் பியர் எமரிக் ஒபமெயாங்கின் (படம்) வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், அவரையும் அவரின் மனைவியையும் தாக்கிவிட்டு, வீட்டில்இருந்த நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றதாக ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
ஆயுதமேந்திய கொள்ளையர்கள் தாக்கியதில் 33 வயது ஒபமெயாங்கும் அவரின் மனைவி அலிசா பெகாக்கும் காயமடைந்ததாக 'எல் பெய்ஸ்' எனும் ஸ்பானிய நாளேட்டுச் செய்தி கூறுகிறது.
பார்சிலோனாவின் புறநகர்ப் பகுதியில் வசித்துவரும் ஒபமெயாங்கின் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது கடந்த இரு மாதங்களில் இது இரண்டாம் முறை.
முகமூடி அணிந்த நால்வர் நேற்று ஒபமெயாங்கின் வீட்டிற்குள் புகுந்ததாகவும் துப்பாக்கியையும் இரும்புத் தடியையும் காட்டி மிரட்டி, நகைகள் இருந்த பெட்டகத்தைத் திறக்கச் செய்ததாகவும் ஊடகச் செய்திகள் கூறின.
"ஒபமெயாங் பயந்துவிட்டார். ஆனாலும் இப்போது நன்றாக இருக்கிறார்," என்று பார்சிலோனா குழு தெரிவித்தது.
ஐரோப்பாவின் முன்னணிக் காற்பந்து வீரர்கள் கொள்ளைக்கு ஆளாவது இது முதன்முறையன்று. இங்கிலாந்தில் கடந்த டிசம்பரில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ஜுவாவ் கன்சியோவும் போர்ச்சுகலில் பென்ஃபிகா குழுவின் நிக்கலஸ் ஓட்டமெண்டியும் தங்கள் வீட்டில் இருந்தபோது கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.

