தோக்கியோ: வழிகாட்டிகள் இடம்பெறாத சுற்றுலா திட்டங்களை வாங்குவோர் இனி ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். எல்லா நாடுகளிலிருந்தும் வருகை தரும் பயணிகளுக்கும் இது பொருந்தும்.
மேலும், இதுவரை இருந்ததில் இரு மடங்கிற்கும் மேலான சுற்றுப்பயணிகளை இனி ஜப்பான் அனுமதிக்கவுள்ளது.
தற்போது தினமும் அதிகபட்சமாக 20,000 பயணிகளை ஜப்பான் வரவேற்கிறது. இம்மாதம் ஏழாம் தேதி முதல் இந்த எண்ணிக்கை 50,000க்கு உயர்த்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா நேற்று தெரிவித்தார்.
குறைவாக இருக்கும் ஜப்பானின் யென் நாணயத்தின் மதிப்பைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சுற்றுப்பயணிகளை ஈரக்க எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாகத் திரு கிஷிடா கூறினார்.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் சுற்றுப்பயணிகளை அனுமதிக்க ஜப்பானிய அரசாங்கம் முடிவெடுத்தது. வழிகாட்டிகள் இடம்பெறும் சுற்றுலா திட்டங்களை வைத்திருப்போர் மட்டுமே அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் போன்ற கடுமையான விதிமுறைகள் நடப்பில் இருந்தன.
சென்ற ஆண்டு 353,119 வெளிநாட்டவர் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டனர். இந்த எண்ணிக்கை, 2019ஆம் ஆண்டு பதிவான 31.9 மில்லியனைக் காட்டிலும் கணிசமாகக் குறைவு.
கொவிட்-19 சூழலில் உலகில் ஆகக் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை செயல்படுத்திய நாடுகளில் ஜப்பான் ஒன்று. இப்போது அது கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளர்த்தி வருகிறது.
செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மூன்று முறை தடுப்பூசி போட்டுக்கொண்டோர் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் திரு கிஷிடா சென்ற வாரம் அறிவித்திருந்தார்.