கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அதைத் தொடர்ந்து 97 வயது டாக்டர் மகாதீர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் அலுவலகம் நேற்று தெரிவித்தது.
டாக்டர் மகாதீர் பல இருதயப் பிரச்சினைகளை எதிர்கொண்டவர். இவ்வாண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதியன்று அவர் மேலும் ஒரு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அதற்கு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு சிகிச்சைக்காக டாக்டர் மகாதீர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிப்ரவரி மாதம் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அப்போது உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனத் தாம் நினைத்ததாக டாக்டர் மகாதீர் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார். டாக்டர் மகாதீர் மொத்தம் 24 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அவரே ஆக அதிக காலம் பிரதமர் பதவியை வகித்தவர்.
இன்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டாக்டர் மகாதீர் சிறையில் இருக்கும் மற்றொரு முன்னாள் மலேசியப் பிரதமர் திரு நஜிப் ரசாக்கை அவ்வப்போது தாக்கிப் பேசுவதுண்டு.
இரண்டு முறை மலேசியப் பிரதமராகப் பதவி வகித்த டாக்டர் மகாதீருக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

