பொன்மணி உதயகுமார்
கலை, கலாசாரத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும் வகையில் இவ்வாண்டின் சிங்கப்பூர் இரவு விழா அமைந்திருந்தது.
இதனுடன் கலைஞர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் அளிப்பது, பழமை வாய்ந்த பிராஸ் பாசா-பூகிஸ் வட்டாரத்தின் வரலாற்றையும் மரபுடைமையையும் நினைவூட்டுவது போன்றவற்றை சிங்கப்பூர் இரவு விழா அதன் இலக்குகளாக கொண்டுள்ளதாக விழாக்கள் மற்றும் வட்டார மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஏற்பாட்டுக் குழுவின் துணை மேலாளர் திருமதி யோகமலர் தியாகராஜன், 37, விளக்கினார்.
பிராஸ் பாசா-பூகிஸ் வட்டாரத்தில் அதிகமான வரலாற்றுத் தளங்கள், மரபுடைமைத் தளங்கள், அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இவற்றில் மறைந்துகிடக்கும் கதைகளையும் வரலாற்றையும் வெளிப்படுத்தி மக்களுக்குக் கலை வடிவத்தில் அவற்றைக் கொண்டு சேர்க்க விரும்புவதாக குறிப்பிட்டார்.
உள்ளூர் மற்றும் சிங்கப்பூர்வாழ் வெளிநாட்டுக் கலைஞர்களின் திறன்களை மேம்படுத்த பயிலரங்கு ஒன்றுக்கும் விழாவைத் திட்டமிட்டக் குழு ஏற்பாடு செய்திருந்தது. தங்கள் திறனை வெளிப்படுத்த இத்தகைய கலைஞர்களுக்கு ஒரு தளம் அமைத்துத் தரவும் மேலும் பல கலை ரசிகர்கள், பார்வையாளர்களை ஈர்க்கவும் சிங்கப்பூர் இரவு விழா இயங்கி வருகிறது.
விழாவின் பல்வேறு அங்கங்களாக பலதரப்பட்ட கலைநிகழ்ச்சிகள், வட்டாரத்தைச் சுற்றி விளக்குகள் பொருத்தப்பட்ட சிற்பங்கள், கலை ஓவியப் படைப்புகள் போன்றவற்றை மக்கள் கண்டு களித்தனர்.
இரண்டாம் உலகப் போருக்கு முன் தொடங்கி 83 ஆண்டுகளுக்குப் பின் இவ்வாண்டு மூடப்பட்ட 'தி கெத்தே' திரையரங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் தற்செயலாக அமைந்திருந்த சிங்கப்பூர் இரவு விழாவின் சிறப்பு அங்கமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
வரும் ஆண்டுகளிலும் இதே வட்டாரத்தில் தொடர்ந்து வரலாற்றையும் மரபையும், காலனித்துவத்திற்கு முந்தைய கதைகளையும் மக்களுக்குக் கலை மற்றும் ஓவியப் படைப்புகள் மூலம் கொண்டு செல்ல விழாவின் ஏற்பாட்டுக் குழு முனைவதாக யோகமலர் கூறுகிறார்.
காலை நேரங்களில், பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கும் ப்ராஸ் பாசா-பூகிஸ் வட்டாரம், இரவில் ஒளியூட்டப்பட்டு கலைநயத்துடன் காட்சியளிப்பதை மக்கள் காணும்போது அவர்களின் மன அழுத்தம் குறையக்கூடும் என்றும் யோகமலர் கருதுகிறார்.
இனி வரும் ஆண்டுகளில், தொடர்ந்து விழாவின் அம்சங்களுக்கு சிறப்பூட்டவும் விழாவை விரிவுபடுத்தவும் திட்டங்கள் இருப்பதாக யோகமலர் கூறியுள்ளார்.