வெளிநாடுகளுக்குச் சென்றால்தான் உல்லாச சுற்றுலா அனுபவத்தைப் பெற முடியுமா? சிங்கப்பூரைச் சுற்றிய சிறு சிறு தீவுகளை வலம் வந்தாலே கண்களுக்கு விருந்தையும் இயற்கையோடு இணைந்திருக்கும் இனிய அனுபவத்தையும் பெறலாம். உலவலாம், வாருங்கள்.
கூசுத் தீவு
ஒவ்வொரு நாட்டைச் சுற்றியும் தொன்மங்களும் கதைகளும் உண்டு. அவ்வாறுதான் கூசுத் தீவைச் சற்றி பழங்கதைகள் பின்னப்பட்டுள்ளன.
கடல்சீற்றத்தில் சிக்கிய சீன, மலாய் ஆடவர்கள் இருவரைக் காப்பாற்ற வந்த பெரிய ஆமை ஒன்று, பின்னர் கூசுத் தீவாக மாறியது என்பது கதை.
சிங்கப்பூரின் அணுக்கமான பல்லின உறவுகளுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு அங்குள்ள துவோ பே கோங் சீனக் கோவிலும் மலாய் பெரியவர்களின் மூன்று புனிதச் சமாதிகளும்.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாத இறுதியிலிருந்து நவம்பர் வரை அங்குள்ள துவோ பே கோங் கோவிலுக்கும் மலாய் சமாதிகளுக்கும் சென்று வழிபட்டு வருவது பலரின் வழக்கம்.
ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட தீயில் கூசுத் தீவில் உள்ள புனித மலாய் சமாதிகள் சேதமடைந்தன. அவற்றின் மறுசீரமைப்புப் பணிகள் சுமார் 70 விழுக்காடு முடிந்துவிட்டன.
சமாதிகளின் சீரமைப்புப் பணிகள் செப்டம்பர் இறுதிக்கு முன்னால் முடிந்துவிடும் என்று அவற்றின் பாதுகாவலர் கூறியுள்ளார்.
கூசுத் தீவில் இரவு தங்க முடியாது. மரினா சவுத் படகுத்துறையிலிருந்து படகில் தீவுக்குச் செல்லலாம். பயணம் ஒரு மணி நேரம். முதலில் செயிண்ட் ஜான் தீவு சென்றுவிட்டு படகில் கூசுத் தீவுக்குத் தொடர்ந்து செல்லலாம்.
செயிண்ட் ஜான் தீவு
அந்நாளில் கப்பலில் வந்தவர்களின் தொற்றுநோய் தனிமைக் காப்பிடமாக இருந்த செயிண்ட் ஜான் தீவைத் தமிழர்கள் புறமலை என்று அழைத்தது சிலருக்கு நினைவிருக்கலாம்.
இன்று செயிண்ட் ஜான் தீவு நகரத்தின் அழுத்தத்திலிருந்து தப்பிச்சென்று ஓரிரு நாள் பொழுதுபோக்குப் புகலிடமாக உள்ளது.
கடல் உயிரின ஆய்வுகள் நடைபெறும் செயிண்ட் ஜான் தீவில் ஒரு சில பகுதிளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல முடியும்.
கடற்கரையில் இளைப்பாறவும் நீச்சலடிக்கவும் உகந்த இடம் செயிண்ட் ஜான் தீவு. பத்து பேர் வரை தங்கும் விடுமுறை பங்களாக்களும் அங்குண்டு.
செயிண்ட் ஜான் தீவிலிருந்து அருகில் உள்ள லஸாரஸ் தீவு, செரிங்காட் தீவு, கியாஸ் தீவு ஆகியவற்றுக்கு நடந்து சென்று அவற்றைக் கண்டு மகிழலாம்.
மேலும், செயிண்ட் ஜான் தீவு பற்றி விளக்கச் சுற்றுலாக்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும்.
கூசுத் தீவைப் போலவே மரினா சவுத் படகுத்துறையிலிருந்து தீவுக்குச் செல்ல முடியும்.
சிஸ்டர்ஸ் தீவு
சிங்கப்பூரின் தெற்கில் குறிப்பாக செயிண்ட் ஜான்ஸ் தீவருகே அமைந்துள்ளன சிஸ்டர்ஸ் தீவுகள்.
சிஸ்டர்ஸ் தீவு கடலில் அமைந்துள்ள ஒரு பசுமையான சொர்க்கம் என்று சிலர் கூறுவார்கள். தீவின் அருகே இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் காணாமல் போனதால் அந்தப் பெயர் வந்தது.
சிஸ்டர்ஸ் தீவுகளில் சிங்கப் பூரின் கடற்பாறைகளைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட கடல் உயிரினப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஆமைகள் குஞ்சு பொரிப்பதற்காக இந்நாட்டில் முதல்முதலாக அமைக்கப்பட்ட இடமும் இங்கு உள்ளது. இரண்டு தீவுகளில் பிக் சிஸ்டர் தீவுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல முடியும்.
கோனி தீவு
சிராங்கூன் தீவு என்று முன்னர் அழைக்கப்பட்ட 'கோனி' தீவு முன்பு ஹாவ் பார் சகோதரர்களுக்குச் சொந்தமாக இருந்தது.
சிங்கப்பூரின் மிக அழகான பூங்காக்களில் ஒன்று 'கோனி' தீவுப் பூங்கா.
இயற்கை வாழ்விடங்களையும் பறவைகளையும் பார்த்து ரசிக்கவும் சைக்கிள் ஓட்டவும் உகந்த இடம் இது.
பொங்கோல் கடற்கரையிலிருந்து 'கோனி' தீவுக்கு நடந்து அல்லது சைக்கிளில் செல்லலாம்.
கையில் உள்ளதைப் பறிக்கும் குரங்குகள் உள்ளன, கவனம்.
செக் ஜாவா
செக் ஜாவா, உபின் தீவின் கிழக்கில் உள்ள பகுதியாகும். ஆனால் அதன் கொள்ளை அழகைப் பார்ப்பதற்காக மட்டுமே அங்கு செல்ல வேண்டும். கடற்கரை மணல், கடற்கரைப் பாறைகள், சுதுப்புநிலம், கரையோர வனங்கள் உள்ளிட்ட ஆறு வெவ்வேறு வகைத் திணைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளதுதான் செக் ஜாவாவின் தனித்துவம்.
100 ஹெக்டர் பரப்பளவு உள்ள செக் ஜாவா பகுதி, உபின் தீவின் படகுத் துறையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து வேன் அல்லது சைக்கிளை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். விரும்பினால், 40 நிமிடம் நடந்தே செல்லலாம்.
செக் ஜாவா சதுப்பு நிலப் பகுதியைப் பற்றியும் அதன் பல்வேறு இயற்கை வாழ்விடங்கள் பற்றியும் விளக்கும் வழிகாட்டப்பட்ட சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.
ஏழு மாடி உயரமுள்ள ஜெஜாவி கோபுரத்தில் முடிந்தால் ஏறி கட்டாயம் 360 டிகிரி சுற்றி தீவைப் பார்க்க வேண்டும். அத்துடன் பழைய மேற்கத்திய டுடோர் பாணியில் கட்டப்பட்ட ஒன்றாம் எண் வீட்டைச் சென்று பார்க்க மறக்க வேண்டாம்.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செக் ஜாவா திறந்துள்ளது. கடல்மட்டம் குறையும் போதுதான், அங்குள்ள கடற்கரையின் இயற்கை அழகை நன்றாகப் பார்த்து ரசிக்க முடியும்.

