சிங்கப்பூரில் இம்மாதம் 21ஆம் தேதி ஆகப் பெரிய சமகால இந்தியக் கலைக் கண்காட்சி தொடங்க இருக்கிறது.
'த ஆர்ட்ஸ் ஹவுசில்' நடைபெறும் கலா சூத்ரா எனும் இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்கள் 20 பேரின் 80 படைப்புகள் இடம்பெறும்.
தொடக்க நாளில் மாலை ஆறு மணிக்கு, தனிப்பட்ட அனுமதி பெற்றவர்களுக்கு மட்டும் கண்காட்சி திறந்திருக்கும்.
அதனையடுத்து, இம்மாதம் 22 முதல் 25ஆம் தேதி வரை பொதுமக்கள் இதை இலவசமாகக் காணலாம். முற்பகல் 11 மணியிலிருந்து இரவு 7 மணி வரை அனுமதி உண்டு.
ஒரே கூரையின்கீழ் நவீன ஓவியங்கள், சமகாலப் படைப்புகள் இரண்டையும் பார்வையாளர்கள் கண்டு மகிழலாம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்களான ஜோகென் சௌத்ரி, சஞ்சய் பட்டாச்சார்யா, நீரஜ் கோஸ்வாமி, பரேஷ் மைட்டி ஆகியோர் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் இவர்களது படைப்புகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுடன் லண்டன், பாரிஸ், நியூயார்க் உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சிக்குச் செல்வோர், எம். எஃப். ஹுசைன், சதீஷ் குஜ்ரால், தோட்டா வைகுந்தம் போன்ற கலை மேதைகளின் ஆகச் சிறந்த படைப்புகளைக் காண முடியும் என்று கூறப்பட்டது.
கண்காட்சியில் பெரும்பாலும் ஓவியங்களும் சில சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இவற்றின் விலை 5,000 வெள்ளி முதல் 30,000 வெள்ளி வரை இருக்கும் என்று ஏற்பாட்டுக் குழு கூறிஉள்ளது.
மக்களைப் பிணைப்பதற்கான ஆகச் சிறந்த வழி ஓவியம் என்று கூறிய கண்காட்சியின் ஏற்பாட்டுக்குப் பொறுப்பு வகிக்கும் 'ஃபை இவன்ட்ஸ்' நிறுவனம், 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு இது சிங்கப்பூரில் இம்முறை நடைபெறுவதாகக் குறிப்பிட்டது. 2013ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சி, கொவிட்-19 கிருமிப்பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளால் கடந்த ஈராண்டுகளில் நடைபெறவில்லை.
சமகால இந்தியக் கலைக் கண்காட்சியான கலா சூத்ரா குறித்த மேல் விவரங்களுக்கு http://www.phievents.com என்ற இணையத் தளத்தை நாடலாம்.