சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டு கண்காட்சிகளைப் பொதுமக்கள் இனி இலவசமாகக் கண்டு களிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
'சுவா மியா டீ: டைரக்டிங் த ரியல்', 'எவர் பிரசண்ட்: ஃபர்ஸ்ட் பீப்பிள்ஸ் ஆர்ட் ஆஃப் ஆஸ்ட்ரேலியா' ஆகியவை அந்தக் கண்காட்சிகள்.
'சுவா மியா டீ: டைரக்டிங் த ரியல்' கண்காட்சி, சிங்கப்பூரின் கம்பீரமான நவீனத்துவ அழகை எடுத்துரைக்கிறது. சிங்கப்பூரின் உருமாற்றத்தைப் பிரதிபலிக்கும் கண்காட்சி இது. 1950கள் முதல் 1980கள் வரையிலான வளர்ச்சி யைக் காட்டும் வேளையில் சிங்கப்பூரின் அன்றாட வாழ்வைச் சித்திரிக்கும் விதமாக இது அமைந்துள்ளது. 'எஃப்1' இரவுநேர கார் பந்தயம் நடைபெறும் நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து இங்கு வரக்கூடிய பார்வையாளர்களுக்கும் இந்தக் கண்காட்சியை இன்று முதல் இம்மாதம் 25ஆம் தேதி வரை காண அனுமதி இலவசம்.
'எவர் பிரசண்ட்: ஃபர்ஸ்ட் பீப்பிள்ஸ் ஆர்ட் ஆஃப் ஆஸ்ட்ரேலியா' கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியக் கலைஞர்களின் 170 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் வரலாறு, கலாசாரம், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை எடுத்துக்கூறும் இந்தக் கண்காட்சியை இம்மாதம் 23ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 4ஆம் தேதிவரை இலவசமாகக் காணலாம்.
இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.