தமிழில் முதல் கணினித் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டின் அனைத்துலக கணித்தமிழ், தகவல் தொழில்நுட்ப மாநாடு இம்மாதம் 3, 4ஆம் தேதிகளில் அடித்தள அமைப்புகள் மன்றத்தில் நடைபெற்றது.
இதில் மரின் பரேட் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் பேரவையின் ஆலோசகருமான ஆர். ரவீந்திரன், இணையம்வழி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் புத்தாக்கச் சிந்தனைகள் பெரும்பங்கு ஆற்ற முடியும் என்பதை அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.
கணித்தமிழ் வழி மின்னியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முன்னோடியான பேராசிரியர் டான் டின் வீ ஆற்றிய உரையில், வருங்காலத்தில் கணினிக் கட்டமைப்புகளின் வளர்ச்சி, பயன்பாடு ஆகியவை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
பிற நாடுகளோடு ஒன்றிணைந்து முன்னேறும் வழிமுறைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். சிங்கப்பூரில் 90களில் தொடங்கிய கணினி வளர்ச்சி என்றும் சிறந்திருக்கும் என்றார் அவர்.
இந்த மாநாட்டில் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளின் வல்லுநர்கள் நேரடியாகவும் இணையம் வழியாகவும் கலந்துகொண்டனர்.
இணையப் பாதுகாப்பு, அன்றாட மின்னியல் செயல்திட்டங்கள், மெய்நிகர் தொழில்நுட்பம். கற்றல், கற்பித்தல் பயன்பாடு, புத்தாக்கத் தொழில் முனைப்பு, தமிழில் கலைச்சொற்கள், மொழிபெயர்ப்பு எனப் பல அம்சங்களில் கணித்தமிழின் வளர்ச்சி குறித்து இவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
கற்றல், கற்பித்தல் முறைகள் குறித்து சிங்கப்பூர் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் மலேசியா, தமிழ்நாடு ஆகியவற்றிலிருந்தும் வல்லுநர்கள் பேசினர்.
ஈராண்டுக்குப் பிறகு நேரடியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வளர்தமிழ் இயக்கம், தொடர்பு, தகவல் அமைச்சின்கீழ் இயங்கும் தேசிய மொழிபெயர்ப்புக் குழு ஆகியவை ஆதரவு அளித்தன. இதில் வெளியிடப்பட்ட மாநாட்டுச் சிறப்பிதழ் இளையர்க்கு கணினி சார்ந்த அரிய தகவல்களை வழங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ், புதிய பாதையில் புத்தாக்கச் சிந்தனைகள் சார்ந்த மின்னியல் வளர்ச்சியோடு உயர்வடைய இந்த மாநாடு வலுவான அடித்தளமிட்டதாகக் கூறப்பட்டது.