ஆரோக்கிய உணவு எனும்போது விளம்பரங்கள், நண்பர்கள், தாங்கள் சிறுபிள்ளையாக இருந்தபோது கூறப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து நமக்கு போதிக்கும் பெற்றோர், மருத்துவர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஆலோசனையைக் கூறுவார். இவற்றில் எதற்குச் செவிசாய்ப்பது? இவ்வாறு ஊட்டச்சத்து தொடர்பில் மக்களிடையே நிலவிவரும் கட்டுக்கதைகளை அறிந்து அடுத்த முறை சரியான உணவை நாம் தெரிவுசெய்வோம்.
மாலையில் உட்கொள்ளும்
கேலரிகளால் உடல் எடை கூடும்.
கட்டுக்கதை. கேலரிகளை எந்த வேளையில் உட்கொண்டாலும், நாம் உட்கொள்ளும் கேலரிகளைக் காட்டிலும் நாம் உடற்பயிற்சி மூலம் நீக்கும் கேலரிகள்தான் முக்கியம்.
'மைக்ரோவேவ்' உணவு உடலுக்கு
நல்லதல்ல.
கட்டுக்கதை. உணவை எவ்வாறு சமைக்கிறோம் என்பதைவிட வெப்ப அளவு, சமைக்கும் நேரம் ஆகியவற்றில்தான் கவனம் தேவை. மீனை வெகுநேரமாக மிகவும் சூடான எண்ணெய்யில் பொரித்தால் அதிலுள்ள சத்துகள் கரைந்துவிடும். இதற்கிடையே, பொருத்தமான தட்டு அல்லது நெகிழி டப்பாவை மைக்ரோவேவில் வைப்பதும் அவசியம்.
கொழுப்பில்லா உணவு என்றால்
அதில் கலோரி இல்லை.
கட்டுக்கதை. கொழுப்பில்லாத உணவு என்றால் அதில் கேலரிகள் சற்று குறைவாக இருக்கும் என்று பொருள். ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவில் சில சமயம் கூடுதல் கேலரிகள்கூட இருக்கலாம். அதனால் வாங்கும் முன், உணவின் ஊட்டச்சத்து விவரக்குறிப்பை நன்கு படிக்கவும்.
பச்சை காய்கறிகளும் சேலட்டும்
உடல் எடை குறைய உதவும்.
உண்மை. கிட்டத்தட்ட கொழுப்புச்சத்து இல்லாத நிலையில் ஆரோக்கியத்திற்குக் கைகொடுக்கும் தன்மை இவற்றுக்கு உண்டு. ஆனால், சேலட் தயாரிக்கும்போது அதில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளில் கொழுப்புச்சத்து இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
சீனியைவிட நாட்டுச் சர்க்கரை சிறந்தது
கட்டுக்கதை. ஊட்டச்சத்து எனப் பார்த்தால் இரண்டுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. விளம்பரங்களால் அதிகமானோர் நாட்டுச் சர்க்கரையை அதிகம் நாடுகின்றனர் என்பதே உண்மை.
இருப்பினும் குடும்ப உறுப்பினர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் உங்கள் உணவிலுள்ள இனிப்பளவைக் கட்டுப்படுத்துங்கள்.
செய்தி: ஹெல்த்ஹப்

