இம்மாதம் 8ஆம் தேதி வியாழக்கிழமை காலமான பிரிட்டனின் எலிசபெத் அரசி, 96 வயதிலும் துடிப்பாக இருந்தார்.
உடல் மூப்படைந்தாலும் மனதளவில் அவர் இளமையாக இருந்தார்.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் டிரசை ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் சந்தித்து, புதிய அரசாங்கத்தை அமைக்கும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார்.
தமது 70 ஆண்டு ஆட்சியில் எலிசபெத் அரசி தொய்வடையாமல் துடிப்புடன் செயலாற்றியதற்கு அவர் கடைப்பிடித்த மனப்பயிற்சிகள் முக்கிய காரணம் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிரையன் கொஸ்லாவ்ஸ்கி விளக்கினார்.
காலையில் எழுந்தவுடன் எலிசபெத் அரசி செய்தித்தாள் வாசித்தார் என்றும் அரசியல், சமூக நடப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இது அவருக்கு உதவியது என்றும் திரு கொஸ்லாவ்ஸ்கி கூறினார்.
அடுத்து தினமும் ஒரு சிவப்புப் பெட்டியில் அரசாங்க ஆவணங்கள் அவருக்கு வழங்கப்படும்.
உளவுத் துறை அறிக்கைகள், நாடாளுமன்ற அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தையும் அவர் தினமும் முழுமையாகப் படித்தார் என்றும் கூறப்பட்டது. தொடர்ந்து வாசித்தது அவர் மனநலனும் சிந்தனைத் திறனும் குன்றாமல் இருக்க உதவின என்றார் திரு கொஸ்லாவ்ஸ்கி.
அறிவியல் கூறும் வாசிப்பின் பயன்கள்
வாசிப்புப் பழக்கம் பல நன்மைகளைத் தருவதாக பல அறிவியல் ஆய்வுகள் கூறியுள்ளன.
முதலில், வாசிப்பு சொல்வளத்தைப் பெருக்குகிறது. அடுத்து, வாசிப்பு மூளையை வலுப் படுத்த உதவுகிறது.
மூன்றாவதாக, மனமும் சிந்தனையும் ஆக்ககரமான ஒன்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை உறுதிசெய்வதும் வாசிக்கும் பழக்கமும் மூளைச் செயல்பாடு குறைவதைத் தடுக்கின்றன.
தினமும் வாசிக்கும் அல்லது கணக்கு போட்டு பார்க்கும் முதியவர்களின் மூளைச் செயல்பாடு தேங்காமல் மாறாக மேம்படுகிறது என்று பல ஆய்வுகள் கூறியுள்ளன.
மேலும், அறிவுத் திறனுடன் மற்றவர் மனம் அறிந்து பரிவு கொள்ளும் ஆற்றலையும் வாசிப்பு வளர்க்கிறது.
அடுத்து, தூங்கு வதற்கு முன்பு வாசிப்பது மனதைத் தளர்வாக்கி எளிதில் தூங்கவும் உதவி செய்கிறது.
அதனுடன், தொடர்ந்து வழக்கமாக வாசிக்கும்போது மனஅழுத்தம் குறைகிறது.
குறிப்பாக புனைவு வாசிக்கும்போது அதில் உள்ள கதைக்களம், கரு, கதாபாத்திரங்களுடன் ஒன்றி, சிறிதுநேரம் வாசகர்கள் தங்களையே மறந்து நூல் அழைத்துச் செல்லும் உலகுக்குள் சென்று விடுகின்றனர்.
அத்துடன், நாவல்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மற்றவர்களைவிட இரண்டு ஆண்டுகள் கூடுதல் ஆயுள் உள்ளதாக யேல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு கூறியது.
மேலும் புனைவு இல்லாத சுய உதவி நூல்கள், மன அழுத்தத்தின் அறிகுறி களைச் சமாளிக்க உதவுகின்றன.

