பலருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று பட்டம் விடுவது ஆகும்.
இரண்டு ஆண்டு முடக்கத்துக்குப் பிறகு, இவ்வாண்டு பட்டம் விடும் விழாக்கள் பல நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
தாம் விடும் பட்டம் உயரப் பறப்பதைப் பார்ப்பதும் நூலை விட்டுப்பிடித்து பட்டத்தைக் கட்டுப்படுத்தி நகர்த்துவதும் மற்றவர்களுடன் போட்டி போடுவதும் பட்டம் விடுவோருக்கு அலாதி இன்பம் தரும்.
பகலிலேயே நட்சத்திரங்கள் போல அழகுடன் மின்னும் பட்டங்கள் பறப்பதைப் பார்ப்பவர்கள் கவலைகள் இல்லாத பிள்ளைப் பருவத்துக்கு மீண்டும் திரும்பி விடுகின்றனர்.
இளமை, நம்பிக்கை, மகிழ்ச்சி, புது நம்பிக்கை போன்றவற்றை பட்டம் விடுதல் பிரதிபலிப்பதாகச் சிலர் கூறுவர். முக்கியமாக பறவை போல கட்டுப்பாடுகள் இன்றி பறக்கும் பட்டங்கள் விடுதலை உணர்வைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதற்கேற்ப லண்டன் நகரின் ஹேம்ப்ஸ்டீட் பகுதியில், ஒரு பட்டம் விடும் விழா நடைபெற்றது.
ஆஃப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி மீண்டும் தொடங்கிய ஓராண்டைக் குறிக்கவும் விடுதலைக்கு ஏங்கும் ஆப்கான் மக்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் தரவும் பட்டம் விடும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பட்டம் விடும் வழக்கம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. சில வரலாற்று ஆய்வாளர்கள், பட்டம் விடுதல் முதலில் இந்தோனீசியாவில் அல்லது மலேசியாவில் தொடங்கி இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
சீனர்கள் அதைப் போரின்போது கோட்டைக்குள் சுரங்கம் அமைக்கும் தூரத்தைக் கணக்கிடப் பயன்படுத்தினராம்.
பட்டம் விடுதல் வெவ்வேறு நாடுகளைக் கடந்துசென்றபோது, பட்டம் விடுவதற்கான காரணங்கள் மாறின. இந்தியாவின் பல மாநிலங்களில் மகர சங்கராந்தி, அதாவது தமிழர்களுக்குப் பொங்கல் திருவிழா நடக்கும் காலகட்டத்தில் பட்டம் விடும் விழாக்கள் விமர்சையாக நடைபெறும்.
அறிவியலுக்கும் பட்டங்கள் பயன்பட்டுள்ளன. மின்னலால் மின்சாரம் தோன்றுவதைப் பட்டம் விட்டு பெஞ்சமின் ஃபிராங்க்லின் நிரூபித்தார். பருவநிலையைக் கணிக்கவும் பட்டம் பயன்படுகிறது.

