ஒரு நாளில் பத்தாயிரம் அடி நடப்பதால், புற்றுநோய், இதய நோய், மறதி நோய், அகால மரணம் ஆகியவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
அத்துடன் நீங்கள் எவ்வளவு வேகம் நடக்கிறீர்கள் என்பதும் முக்கியம் என்று அது கூறியது.
அந்த ஆய்வு, 'ஜாமா' மருத்துவ ஆய்விதழில் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. சிட்னி, தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகங் களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அதை மேற்கொண்டனர். அதில் பிரிட்டனில் உள்ள 78,500 பேர் ஏழு நாள்களுக்கு தாங்கள் எடுத்துவைக்கும் அடிகளைக் கணக்கிடும் கருவிகளை அணிந்தனர். அவர்களின் உடல் நலம் கண்காணிக்கப்பட்டது.
ஆனால் உடல் நன்மை பெற, பத்தாயிரம் அடி எடுத்து வைக்கத் தேவையில்லை. குறைவாக நடந்தாலும் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் உடலுக்கு நல்லது என்றும் ஆய்வு தெரிவித்தது.
ஆய்வில் கலந்துகொண்டவர்கள் எடுத்து வைத்த ஒவ்வோர் ஈராயிரம் அடிக்கும் அகால மரணத்தின் அபாயம் 8 விழுக்காடு முதல் 11 விழுக்காடு வரை குறைந்தது. புற்று நோய், இதயநோய் போன்றவற்றுக்கும் இது பொருந்தியது.
அதே வேளையில் நாளுக்கு பத்தாயிரம் அடிக்கு மேல் நடந்தால் அதனால் அதிக பலனில்லை என்று ஆய்வு கூறியது.
கூடுதல் அடிகள் நடந்தால் மறதி நோய் அபாயமும் குறைந்தது.
நாளுக்கு 10,000 அடிகள் நடந்தவர்களுக்கு மறதிநோய் ஏற்படும் அபாயம் 50 விழுக்காடு குறைந்தது. மேலும், நாளுக்கு சுமார் 3,800 அடிகள் நடப்பவர்களுக்கு மறதிநோய் ஏற்படும் அபாயம் 25 விழுக்காடு குறைந்தது.
ஒருவர் நடக்கும் வேகமும் அவர்களின் உடல்நலனைத் தீர்மானிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் காட்டின. வேகமாக நடந்தவர் களுக்கு இதய நோய், புற்றுநோய், மறதி நோய், அகால மரணம் எல்லாவற்றின் அபாயம் குறைந்தது.
ஒரு நிமிடத்துக்கு 40 அடி எனும் வேகத்தில் நாளுக்கு 6,153 அடி எடுத்து வைத்தபோது, மறதிநோய் ஏற்படும் அபாயம் 57 விழுக்காடு குறைந்தது.
அத்துடன், ஒரு நாளில் 30 நிமிடத்துக்கு, ஒரு நிமிடத்துக்கு 112 அடிகள் எனும் வேகத்தில் நடந்தவர்களுக்கு மறதிநோய் அபாயம் 60 விழுக்காடு குறைந்தது. ஒரே நேரத்தில் 30 நிமிடங்கள் நடக்கத் தேவையில்லை.
இதனால், வீட்டு வேலைகள், தோட்ட வேலை போன்ற அன்றாட திட்டமிடப்படாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தாங்கள் எடுத்து வைக்கும் அடிகளைக் கணக்கிட்டால் நல்லது என்று ஆய்வாளர்களில் ஒருவரான இணைப் பேராசிரியர் போர்ஜா டெல் போஸோ குரூஸ் கூறினார்.

