சிங்கப்பூரில் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம் உண்டு. இதைத் தடுக்காவிட்டால் 2050ஆம் ஆண்டுக்குள் நீரிழிவு நோயால் ஏறத்தாழ ஒரு மில்லியன் சிங்கப்பூரர்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
"ஊட்டச்சத்து ரீதியாக, மக்களுக்குத் தங்களின் உணவுமுறையில் இனிப்பே தேவையில்லை," என்று 2016ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததுடன் மக்கள் குறைந்தபட்ச இனிப்பை உட்கொள்ள நாடுகள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூரர்கள் தினமும் சராசரியாக 12 தேக்கரண்டி, அதாவது 60 கிராம் இனிப்பை உட்கொள்கின்றனர் என்று 2018 ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆனால், 50 கிராமுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வதே சிறப்பு என்கின்றனர் உணவுமுறை நிபுணர்கள்.
இந்நிலையில், உணவுமுறையில் இனிப்பளவைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அவர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.
உங்களின் குளிர்சாதனப் பெட்டியில் இனிப்பளவைக் கூட்டக்கூடிய உணவையும் பானங்களையும் அடையாளம் கண்டு, அவற்றுக்குப் பதிலாக குறைந்த இனிப்பளவு கொண்ட உணவுப்பொருள்களை நாடுங்கள்.
உணவு பானங்களை வாங்கும்போது அவற்றின் மீது ஒட்டப்பட்டுள்ள ஊட்டச்சத்து விவரக் குறிப்பை நன்கு ஆராய்ந்து இனிப்பு குறைவாக உள்ள வகையைத் தேர்வுசெய்யுங்கள்.
உணவில் இனிப்புக்குப் பதிலாக 'சுக்ரோஸ்', 'டெக்ஸ்ட்ரோஸ்', 'சிரப்' எனும் இனிப்பு பாகு போன்றவை சேர்க்கப்பட்டதாக இருந்தால் அது ஊட்டச்சத்து ஆகாது என்பதை அறிந்திடுங்கள்.
குழம்பு வகை உணவாக இருந்தால் அதிலும் கவனம் தேவை. ஒரு தட்டு மீ சியாமில் 10 தேக்கரண்டி இனிப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிகம் கடையில் உணவு வாங்காமல் வீட்டில் சமைத்தால் இனிப்பளவைக் கட்டுப்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சுவையைக் கூட்டுவதற்கு சமைக்கும்போதே இனிப்புக்குப் பதிலாக மூலிகைப் பொருள்கள் மற்றும் மசாலா பொருள்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.
புதிதாக பழுத்த பழங்கள், உலர்ந்த பழங்கள், தேன் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படும் இனிப்பை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
'சோடா' அல்லது இனிப்பு பானத்திற்குப் பதிலாக தண்ணீர் மற்றும் பழங்கள் சேர்க்கப்பட்ட நீரை அருந்துங்கள்.
இனிப்பளவைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். காப்பியில் மூன்று தேக்கரண்டி சீனி சேர்ப்பவராக நீங்கள் இருந்தால், அளவை ஒன்றரைக்குக் குறைத்துக்கொள்ளுங்கள்.
பல ரொட்டி வகைகளில் இனிப்பளவு அதிகமாக இருக்கும். அதனால் வெள்ளை ரொட்டிக்குப் பதிலாக புளித்த மாவில் தயாரிக்கப்பட்ட ரொட்டியைச் சாப்பிட்டுப் பாருங்கள்.
சமசீரான உணவை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஊட்டச்சத்து அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
செய்தி: அம்ரிதா கோர்

