உலகின் ஆக உயரமான 14 சிகரங்களை ஒரு முறையல்ல, இரண்டு முறை அடைந்த முதல் நபர் என்ற பெருமையை 47 வயது சானு ஷெர்பா பெற்றுள்ளார். 8,000 மீட்டருக்கு மேல் உயரங்கொண்ட 14 மலைகளின் உச்சியை அடைய வேண்டும் என்பதைப் பலரும் தங்கள் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தாலும் அவ்வாறு அடைந்தவர்கள் 50க்கும் குறைவே.
இருப்பினும், நேப்பாளத்தைச் சேர்ந்த திரு சானு, கடந்த மாதம் பாகிஸ்தானின் 8,035 மீட்டர் உயரமுடைய 'கசெர்பிரம் II' சிகரத்தைத் தொட்டு சாதனை படைத்தார்.
"நான் சாத்தியமில்லாத செயலைச் செய்திடவில்லை. நான் என் வேலையைத்தான் செய்தேன்," என்றார் அவர். மலையேறும் வழிகாட்டியான திரு சானு, 2006ஆம் ஆண்டில் தமது முதல் சிகரத்தைத் தொட்டார். அப்போது அவர் தென்கொரியக் குழு ஒன்றுக்கு வழிகாட்டியாக இருந்தார்.
பொதுவாக நேப்பாள வழிகாட்டிகள், எவரெஸ்ட் பள்ளத்தாக்குகளைச் சேர்ந்த ஷெர்பா இனத்தவராக இருப்பர். குழுக்களுக்கு வழிகாட்டியாக இருந்து, பயணத்திற்குத் தேவையான பொருள்கள், உணவு ஆகியவற்றைச் சுமப்பதுடன் கயிறுகளையும் ஏணிகளையும் சரிசெய்து உதவுவர். மனிதனுக்குத் தேவையான உயிர்வாயு, 8,000 மீட்டருக்கு மேலுள்ள உயரத்தில் அதிக நேரம் நீடிக்காத நிலையில் ஆபத்து நிறைந்த ஒரு வேலையில் திரு சானு இருக்கிறார்.
நேப்பாளத்தின் எட்டு சிகரங்களை எட்டிப் பிடிக்கும் பயணத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 14 பேர் உயிரிழக்கின்றனர். எவரெஸ்ட்டில் நேர்ந்த மரணங்களில் சுமார் 33 விழுக்காட்டினர் நேப்பாள வழிகாட்டிகளும் 'போட்டர்' எனப்படும் சுமைதாங்கிகளும் ஆவர்.
"நான் மலையேறும்போதும் இறங்கும்போதும் வழி நெடுகே பலரது இறந்த உடல்களைப் பார்த்திருக்கிறேன்," என்று பகிர்ந்துகொண்டார் திரு சானு. 30 வயது வரை உருளைக்கிழங்குகளையும் சோளத்தையும் அறுவடை செய்துவந்த அவர், மலையேறும் வழிகாட்டிகளாக தம் நண்பர்கள் அதிக பணம் ஈட்டுவதைப் பார்த்து, எட்டு பேர் அடங்கிய தம் குடும்பத்திற்காக தாமும் அதில் இறங்கினார்.
எவரெஸ்ட் சிகரத்தை மட்டும் ஏழு முறை தொட்டதுடன் உலகின் ஆக உயரமான 14 சிகரங்களில் நான்கின் உச்சத்தை மும்முறை அடைந்துவிட்டார்.
"இருமுறை புரிந்த சாதனையை நான் மூன்றாக்கலாம். ஆனால் அதுவும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து உள்ளது," என்கிறார் திரு சானு.

