வி.கே. சந்தோஷ் குமார்
திருவாட்டி விவியன் லை தமது சிறுவயதில் ஷாவ்லின், தாய்ச்சி கற்றுக்கொண்டபோது தம்மால் ஆற்றலுடன் நடனமாட முடியாதது குறித்துக் கவலைப்பட்டதில்லை. இவர் நெட்டோட்டங்களிலும் ஓடியுள்ளார்.
நடனம் இவரது விருப்பமாகவோ, அதில் இவர் தேர்ந்தவராகவோ இருந்ததில்லை.
ஆனால், சிராங்கூன் சாலை ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோவிலில் ஒரு நடனக்குழுவில் சேர்ந்தபின் அது மாறிப்போனது.
தொடக்கத்தில் சிங்கப்பூர் பௌத்த இனத்தவராக இருந்த திருவாட்டி விவியன், நண்பர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் 1990களில் இருந்து இந்து சமயத்தைத் தழுவத் தொடங்கினார். அதன்பின் நடனத்திலும் இவருக்கு ஆர்வம் பெருகியது.
2014ஆம் ஆண்டு தமது 52வது வயதில் தன்னால் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தைக் கற்றுக்கொள்ள இயலுமா என்று நடன ஆசிரியையான சித்தாரவம்மா சந்திரசேகரனிடம் கேட்டார்.
"பரதநாட்டியம் கடினமானது என்பதாலும் அதன் தாளத்திற்கு ஏற்ற இயல்பான உணர்வு திருவாட்டி விவியனிடம் தோன்றாததாலும் சற்று தயங்கினேன்," என்றார் திருவாட்டி சித்தாரவம்மா.
"ஆனாலும், அவரது ஆர்வத்தைக் கண்டு சேர்த்துக்கொண்டேன். நடனத்தை அனைவரும் ரசிக்கலாம் என்பதால் அவருக்கு ஏன் கற்றுத்தரக்கூடாது என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
"திருவாட்டி விவியனின் உடல் நன்கு வளையும் தன்மை கொண்டிராததால் நான் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், எட்டு ஆண்டுகளில் பரதக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, அவர் என்னை வியப்படையச் செய்தார்.
"இன்று அவர் நல்லதொரு பரதக்கலைஞர் என்பதைப் பெருமையுடன் சொல்கிறேன்," என்றார் திருவாட்டி சித்தாரவம்மா.
இப்போது 60 வயதாகும் திருவாட்டி விவியன், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக்கழகத்தின் மகாத்மா காந்தி நினைவுக்கூடத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை பரதநாட்டிய அரங்கேற்றம் புரியவிருக்கிறார்.
"ஈராண்டுகளுக்கு முன்பே நான் தயாராகிவிட்டபோதும் கொவிட்-19 தொற்றுப் பரவலால் எனது அரங்கேற்றம் தள்ளிப்போனது.
"இம்முறை கணேசபெருமானின் அருளுடன் எனது தனி அரங்கேற்றம் நல்லமுறையில் இடம்பெறும் என நம்புகிறேன்," என்றார் திருவாட்டி விவியன்.
மொத்தம் 80 நிமிடம் இடம்பெறவுள்ள இவரது அரங்கேற்றம், புஷ்பாஞ்சலி, ஜதிஸ்வரம், ஷப்தா, வர்ணம் உள்ளிட்ட ஏழு அங்கங்களைக் கொண்டது.
பரதக்கலையின் மீதான திருவாட்டி விவியனின் ஆர்வத்தை அவரது அரங்கேற்றத்தில் காண்பீர்கள் என்கிறார் அவரின் குருவான திருவாட்டி சித்தாரவம்மா.
தாம் 50 வயதை எட்டும்வரை தமக்கு நடனம் குறித்து எதுவும் தெரியாது என்று திருவாட்டி விவியன் சொன்னார்.
"நான் 18 வயதிலிருந்து ஷாவ்லினும் தாய்ச்சியும் கற்கத் தொடங்கினேன்," என்றார் தன்னுரிமைத் தொழிலாக 'ஸ்பா தெரபிஸ்ட்'டாக இருக்கும் ஒற்றையரான இவர்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு நெட்டோட்டங்களில் ஓடத் தொடங்கிய இவர், நீண்ட தொலைவு ஓடுவதில் பிரச்சினை ஏற்பட்டதால் அதை நிறுத்திவிட்டார். அதன்பின் உடலை உறுதியாக வைத்திருப்பதற்கான வழிகளை ஆராய்ந்தார்.
"பின்னர் குரு சீதா இந்திய நடனங்கள் கற்றுத் தந்ததைக் கண்டு, எனக்குக் கற்றுத் தருவீர்களா என்று கேட்டேன். முதலில் நாட்டுப்புற நடனங்களில் தொடங்கி, படிப்படியாக பரதத்திற்கு மாறினேன்," என்றார் திருவாட்டி விவியன்.
தம் குருவின் 12 வயது மாணவி ஒருவர் முழுப் பாராயணம் செய்தது கண்டு வியந்துபோனதாகக் குறிப்பிட்ட இவர், அம்மாணவியைப்போல் தானும் ஒருநாள் மேடையேற முடியுமா எனக் கேட்டபோது, அதற்குத் தம் குரு சரி என்று சொன்னதை நினைவுகூர்ந்தார்.
நடனம், இசை குறித்து நல்ல ரசிப்புத்தன்மை இல்லாததால் தொடக்கத்தில் சிரமமாக இருந்தது. பரதச் சந்தங்களும் உரைகளும் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதத்தில் இருந்ததால் மொழியும் ஒரு தடைக்கல்லாக இருந்தது.
"குரு சீதா எனக்கு ஆங்கிலத்தில் விளக்கி, எல்லா நடன அசைவுகளையும் இசைக்குறிப்புகளையும் காட்டுவார் என்பதால் நான் அதிர்ஷ்டசாலி," என்றார் திருவாட்டி விவியன்.
"தொடக்கத்தில் மிகுந்த சவாலாக இருந்தது. ஆயினும் குரு சீதாவின் சென்னையைச் சேர்ந்த ஆசிரியரும் பெயர்பெற்ற பாடகரும் நட்டுவாங்க வல்லுநருமான சீதாராம சர்மா, சிங்கப்பூரில் இருந்தபோது எனக்கு பரதக்கலையின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தார்," என்று இவர் சொன்னார்.
அவர்கள் தம்முடன் அமர்ந்து நடனத்தையும் இசையின் தாள லயத்தை கவனித்து எப்படி ரசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததால், படிப்படியாக எல்லாப் பிரச்சினைகளையும் தாண்டி வந்ததாக இவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜனவரியில் நடன வகுப்புகள் சிஃபாசுக்கு மாறுமுன் ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோவிலில் இவர் நடனப் பயிற்சி பெற்றார்.
'பரதம் ஒருவகை வழிபாடு'
"நான் 'லைன் டான்ஸ்', 'பெல்லி டான்ஸ்' போன்ற நடனங்களைக் கண்டுள்ளேன். ஆனால், பரதம் ஒரு வழிபாடு போன்றது என்பதால் தனித்துவமானது. என்னைப் பொறுத்தவரை, இது வழிபாடு செய்து, இறைவனிடம் பேசுவது போன்றது," என்றார் திருவாட்டி விவியன்.
"கற்பதற்கு ஏராளமாக உள்ளது. ஆனால், எனக்கு வரம்புகள் இருக்கின்றன. நான் கற்றுக்கொண்டவை எல்லாமே குரு சீதாவின் பெருந்தன்மையால்தான். எனது திறமைக்கு ஏற்றபடி கற்றுக்கொடுத்து, கடினமான நடனத்தை எனக்காக எளிமையாக்கித் தந்தார் அவர்," என்றார் திருவாட்டி விவியன்.
"அவருக்குச் சமயம் ஒரு பொருட்டல்ல. அவரிடமிருந்து பொறுமை, நல்லொழுக்கம், நேர்மை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன். இவையனைத்தும் என நடனத்தில் வெளிப்படும்," என்றும் இவர் சொன்னார்.
திருவாட்டி விவியனின் நான்கு மூத்த சகோதரர்களில் ஒருவர், இவரது அரங்கேற்றத்தை நேரில் காணவிருக்கிறார். இவரின் 96 வயது தாயார் இணையம் வழியாக நேரலையில் அரங்கேற்றத்தைக் காணவுள்ளார்.
"இது என் குடும்பத்தினருக்கு வியப்பளிப்பதாக இருக்கும். இந்தியப் பாரம்பரிய நடனம் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. நான் இவ்வளவு கற்று, தன்னிச்சையாக பரதம் ஆடுவது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும்," என்றார் திருவாட்டி விவியன்.
"பரதநாட்டியம் என் உடலை உறுதியாக வைத்திருக்க உதவுவதுடன் என் மனத்தையும் திறந்துள்ளது. ஒவ்வொரு நடனமும் வெவ்வேறு கதையைச் சொல்லும். அமைதி, நட்பு, நல்லிணக்கம், உண்மை, பரிவு, சகிப்புத்தன்மை உள்ளிட்ட பண்புநலன்களை நான் கற்றுக்கொண்டுள்ளேன்," என்று பெருமிதத்துடன் கூறினார் இந்த நடனமணி.

