ஆ. விஷ்ணு வர்தினி
மேடை பரதநாட்டிய நிகழ்ச்சிகளின்போது பலரும் திருவாட்டி கமாரியா யூசுப்பின் நடனத்தைக் கண்டு வியந்திருக்கின்றனர். ஏனெனில், அவர் இந்து சமயத்தைச் சார்ந்தவரில்லை. இருப்பினும், பரதக்கலை குறித்த ஆழமான புரிதலும் அதன்மீது மிகுந்த பற்றும் கொண்டிருந்தார் இவர்.
பதினெட்டு வயதில் விளையாட்டுத்தனமாக தொடங்கிய பரதநாட்டியப் பயணமே இவரது அடையாளமாகவும் வாழ்க்கையாகவும் மாறிவிட்டது.
சங்கீத, பரதநாட்டிய கலாரசிகராய்த் திகழ்ந்த தந்தை விதைத்த விதையில் தமது பரதநாட்டியப் பற்று துளிர்விட்டு வளர்ந்ததாய்க் கூறினார் 58 வயதான திருவாட்டி கமாரியா.
ஆனால், தமது ஆசையை எதிர்த்த தம் தாயார், உற்றார் உறவினர்களின், சமயம் சார்ந்த சமூகத்தின் கேள்விகளுக்கு அஞ்சினார். தம் தோழிகளுக்கு ஆடை அணிகலன்களை வாங்கித் தந்து, நடன நிகழ்ச்சிகளுக்கு நேரில் வந்து ஆதரவளித்த அவர்களின் பெற்றோர்களைக் காணும்போதெல்லாம் ஏக்கமாக உணர்ந்ததாய் திருவாட்டி கமாரியா கூறினார். இவரது நடனப் பயிற்சி ரகசியமாகவே இருந்து வந்தது.
"அம்மாவுக்கு நான் பொட்டு வைப்பதெல்லாம் பிடிக்கவில்லை. ஆனால், எனது வளர்ச்சியையும் தணியாத பற்றையும் கண்டபின் அவர் மனம் மாறினார். எனது கலைப்பயணம் குறித்து இப்போது குடும்பத்தார் அனைவருமே பெருமையாக உணர்கின்றனர்," என்றார் திருவாட்டி கமாரியா.
பரதநாட்டியத்தின் மூலம் இந்து சமயக் காப்பியங்கள், சடங்குகள், கடவுள்கள் முதலியவற்றுக்கு அறிமுகமான திருவாட்டி கமாரியா, அவற்றைக் கதைகளாக எண்ணி புரிந்துகொள்ள முற்பட்டார். தற்போது அவரிடம் பயிலும் கிறிஸ்துவ, முஸ்லிம் மாணவர்களுக்கும் இவர் அதே வழிமுறையைப் பகிர்ந்துகொள்கின்றார்.
"பரதம் ஆன்மாவைத் தொடவல்லது. அது சமயத்தையும் தாண்டி, நினைவாற்றலை மேம்படுத்தும்; நற்பண்புகளை வளர்க்கும்," என்றார் இவர்.
டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் தொடங்கி, சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் நடனம் பயின்றார் திருவாட்டி கமாரியா. அதன்பிறகு, முழுநேரத் தாயாராக இருந்த காலத்தில், இவருக்கு பள்ளிகளின் இந்திய நடனக்குழுக்களில் பகுதிநேர பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது.
அதனைத் தொடர்ந்து, முழுநேர நடன ஆசிரியராக தொடக்கப்பள்ளிகளிலும் சமூக நிலையங்களிலும் அப்பணியை மேற்கொண்டார்.
2012ஆம் ஆண்டில் 'தர்ஷன் ஃபைன் ஆர்ட்ஸ்' என்ற நடன நிலையத்தையும் தொடங்கினார். ஒற்றைத் தாயாரான தனக்கு, தன் இரு மகள்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்க பரதநாட்டியமே பெரிதும் கைகொடுத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறினார் திருவாட்டி கமாரியா.
ஏறத்தாழ 100 மாணவர்களுக்கு ஆசிரியராக உள்ள இவர், மாணவர்களிடம் ஏற்படுத்தியுள்ள ஆர்வத்தையும் மனநிறைவையுமே தம் பயணத்தின் பயனாகக் கருதுகிறார்.

