இதயத்துடிப்பு நின்றுபோவது முன்பைவிட இப்போது அதிகமாகிவிட்டது. இது, எந்த நேரத்திலும் எவரையும் பாதிக்கலாம். எனினும், பெரும்பாலானோருக்கு அதிகாலை வேளையிலேயே இது ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் ஹரியானா மாநிலம், குருகிராம் நகரைச் சேர்ந்த இதய மருத்துவரான டாக்டர் டிஎஸ் கிளெர், "இதயத்துடிப்பு நின்றுபோனதால் அல்லது மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படும் நோயாளிகள், பெரும்பாலும் அதிகாலையில் வருகின்றனர்," என்று கூறினார்.
அதிகாலையில் உடலில் ஒருவகை சுரப்புநீர் வெளியிடப்படுவதே இதற்குக் காரணம் என்றார் அவர்.
"அதிகாலை 4 மணியளவில் நம் உடலில் சைட்டோகினின் எனப்படும் சுரப்புநீர் வெளிவருகிறது. இதனால் இதயத்துடிப்பு மாறவும் இதயத்துடிப்பு நின்றுபோகவும் சாத்தியம் உள்ளது," என்று அவர் சொன்னார்.
மூத்த இதய நிபுணரான டாக்டர் நித்தி சதா நெகி, "பகல் வேளையில் நாம் விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் இயங்குகிறோம். நமது சக்தியைப் பயன்படுத்திவிட்ட நிலையில், இரவு வேளையில் நாம் தூங்க தயாராகிறோம். அதிகாலை வேளையில் ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் அதிகரிக்கிறது. இதனால் அதிகாலையில் இதயம் இயங்கும் முறை மாறக்கூடும்," என்று கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரைச் சேர்ந்த டாக்டர் எஸ்எஸ் சிபியா, "அதிகாலை வேளையிலும் தூக்கத்தின் கடைசிக் கட்டத்திலுமே மாரடைப்பும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் ஏற்படும் அபாயம் அதிகம்," என்றார்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகைப்பழக்கம் போன்றவையும் இதயத்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், முந்தைய தலைமுறையினரைவிட தற்போதைய தலைமுறையினருக்கு வாழ்வில் முன்கூட்டியே இதயப் பிரச்சினைகள் ஏற்படுவதாக நிபுணர்கள் சொல்கின்றனர்.
சிறந்த இதய ஆரோக்கியத்துக்கு தினமும் இரவு குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவது முக்கியம் என்று இதய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதோடு மனவுளைச்சலைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் ஆரோக்கியமான உணவுமுறையைக் கடைப்பிடிப்பதும் அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதயத்துடிப்பு நின்றுபோவதற்கும் மாரடைப்புக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்தும் நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இதயத்தின் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. மாறாக இதயத்துடிப்பு நின்றுபோகும்போது உடலின் ஏனைய பகுதிகளுக்கு இதயம் ரத்தம் அனுப்புவதும் நின்றுவிடுகிறது.
இதனால் பாதிக்கப்படும் ஒருவர் இயல்பாக மூச்சுவிடுவதும் நின்றுவிடுகிறது. பொதுவாக மாரடைப்பைவிட இதயத்துடிப்பு நின்றுபோவதே உயிருக்கும் மேலும் ஆபத்தானது எனக் கூறப்படுகிறது.

