வாகனமோட்டிகள் அவசர நேரத்தில் வேகமாகச் செயல்பட வேண்டும்
விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அவசர வாகனங்கள் விரையும்போதோ வாகன தீ விபத்தில் வாகனமோட்டி சிக்கிக்கொள்ளும்போதோ அதிலிருந்து உயிரைக் காத்துக்கொள்வதில் ஒவ்வொரு நொடியும் முக்கியம்.
அத்தகைய சூழ்நிலையில் எப்படி செயல்படுவது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், வாழ்வா சாவா என்பதை அது தீர்மானிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் மோட்டார் வாகன சங்கத்தின் தலைவர் பெர்னர்ட் டே கூறினார்.
'சாலைகளில் அவசர சூழலுக்குத் தயார்நிலை' எனும் கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பேசிய திரு டே, வாகனமோட்டிகள் உயிர்காக்கும் திறன்களைக் கற்றிருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
போக்குவரத்துக் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சாலைப் பாதுகாப்பு மன்றம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் 50க்கும் அதிகமான வாகனமோட்டிகளும் இந்த மூன்று அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வாகன தீ விபத்துகளில் என்ன செய்வது, தீயிலிருந்து எப்படி பாதுகாப்பாக தப்பிப்பது என்பது பற்றி குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மேஜர் டான் டியோ சாய், வாகனமோட்டிகளுக்கு சொல்லித் தந்தார்.
இக்கருத்தரங்கில் பங்கெடுத்தவர்கள், இதய இயக்கத்தை மீட்டெடுக்கும் சிகிச்சையையும் (சிபிஆர்) முதலுதவி செய்யவும் கற்றுக்கொண்டனர்.
வாகனம் சென்றுகொண்டிருக்கும்போதோ அது நகராமல் இருக்கும்போதோ அதில் தீ விபத்து ஏற்படலாம். வாகன இயந்திரம் அளவுக்கு அதிகமாக சூடாவது, மின்சாரக் கோளாறு ஏற்படுவது அல்லது விபத்துக்குப் பிறகு வாகனத்தின் எரிபொருள் தொட்டி சேதமடைவது போன்ற காரணங்களால் வாகன தீவிபத்து ஏற்படுகிறது.
"தீவிபத்துகள் அனைத்தும் சிறியதாகவே தொடங்குகின்றன. தீயைத் தொடக்கத்திலேயே அணைத்துவிடுவது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால், அது கட்டுக்கடங்காமல் பரவிவிடும். பின்னர் அதை அணைப்பதற்குப் பெரிய முயற்சி தேவைப்படும்," என்று மேஜர் டான் வலியுறுத்தினார்.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம், இக்கருத்தங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
2020துடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு உயிரிழப்பை விளைவித்த விபத்துகளின் எண்ணிக்கை 25 விழுக்காடு கூடியதாக போக்குவரத்துக் காவல்துறையின் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அவர் சொன்னார்.

