பேருந்துச் சவாரிகள், 'லேகோ' விளையாட்டு, பலகாரங்களைச் செய்துகாட்டும் சமையல் நிகழ்ச்சிகள் எனக் குடும்பங்களும் இளையர்களும் இவ்வாண்டு தீபாவளியைக் களிப்புடனும் குதூகலத்துடனும் கழிக்க இந்திய மரபுடைமை நிலையம் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
மாதங்கி இளங்கோவன்
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து சவாரிகள், தீபாவளி ஒளியூட்டு அலங்காரங்களை அருகிலிருந்தபடி பார்க்கவும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் பொதுமக்களுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கித் தரவுள்ளன.
இந்திய மரபுடைமை நிலையம் தீபாவளிக்காக, செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளில் இந்தப் பேருந்து சவாரிகளும் அடங்கும்.
சிராங்கூன் ரோட்டிலும் ரேஸ் கோர்ஸ் ரோட்டிலும் இடம்பெற்றுள்ள தீபாவளி ஒளியூட்டை திறந்த, பெரிய பேருந்துகளில் சென்று பார்க்கலாம். இச்சவாரிகள் அக்டோபர் மாதம் 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் செயல்படும்.
பேருந்தில் மட்டுமல்லாமல், லிட்டில் இந்தியாவை 'ரிக்ஷா' வண்டியிலும் வலம் வரலாம்.
இச்சவாரிகள் செப்டம்பர் 30ஆம் தேதியன்றும் அக்டோபர் 7, 14, 21 தேதிகளன்றும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை செயல்படும்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட எண்ணெய் விளக்குகளுக்கு சாயம் பூசும் பயிலரங்குகள் அக்டோபர் 15, 16 தேதிகளில் நடைபெறும்.
இப்பயிலரங்குகளில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த வண்ணங்களில் எண்ணெய் விளக்குகளுக்கு சாயம் பூசி வீட்டை அலங்கரிக்க அவற்றைப் பயன்படுத்தலாம்.
தீபாவளிக்கு சிறப்பு உணவு வகைகளை ருசியாகத் தயாரிக்கும் செய்முறைகளைக் கற்றுக்கொள்ள அக்டோபர் 16, 23 தேதிகளில் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிபுணர்கள் தேவகி சண்முகமும் வசுந்தரா ராமசாமியும் சமைத்துக் காட்டவுள்ளனர்.
மணமணக்கும் உணவை சமைக்க வேண்டுமானால் இந்நிகழ்ச்சிக்கு கட்டாயம் வருமாறு ஏற்பாட்டாளர்கள் ஊக்குவிக்கின்றனர்.
'தீபாவளி இன் எனிமல் லேண்ட்', அதாவது விலங்கு நிலத்தில் தீபாவளி எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியை நடத்த உள்ளது ஏ.கே.டி. கிரியேஷன்ஸ் அமைப்பு.
இசை, நாடகம், பிள்ளைகளோடு உரையாடும் அங்கங்கள் எனச் சுவையான, கவனத்தை ஈர்க்கும் அம்சங்கள் இந்த நிகழ்ச்சியில் உண்டு. அக்டோபர் 22ஆம் தேதியன்று இந்த நிகழ்ச்சி காலை 11.30 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும் 3 மணிக்கும் நடைபெறும்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் 'லேகோ' அடுக்குகளால் செய்யப்பட்ட ரங்கோலி கோலத்தில் பொதுமக்கள் 'லேகோ' துண்டுகளைப் பொருத்தி முழுமையாக்கலாம்.
அதனுடன், மரபுடைமை நிலையத்துக்குச் சென்று அழகிய புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய் பவர்கள் இலவச தீபாவளி அன்பளிப்பு உறைகளை எடுத்துக்கொள்ளலாம். இந்திய மரபுடைமை நிலையத்தை 'டேக்' செய்தால் போதும், வண்ணமிக்க உறைகளைத் தாராளமாகப் பெறலாம்.
பெரிய பேருந்து சவாரிகளுக்கு அல்லது 'ரிக்ஷா' வண்டி சவாரி களுக்கு செல்ல விரும்புவோர் $10 கட்டணம் செலுத்த வேண்டும்.
சவாரிகளுக்குப் பதிந்துகொள்ளவும் மற்ற நிகழ்ச்சிகள் பற்றிய மேல்விவரங்களுக்கும் கட்டணத் தகவல்களுக்கும் https://ihc-programmes.peatix.com/ என்ற இணையப் பக்கத்தை நாடலாம்.

