சமூக ஊடகங்களில் சத்தமின்றி நடக்கும் ஒருவகை தணிக்கை முறையைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? சமூக ஊடகப் பயனாளர்களுக்கே தெரியாமல் அவர்களின் பதிவுகளும் படங்களும் தணிக்கை செய்யப்படுவதும் தடைசெய்யப்படுவதும் 'ஷேடோ பேனிங்' (shadow banning) என்பதாகும்.
பிரபலங்களும் அரசியல்வாதிகளும் இதற்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்பட்டாலும் இத்தகைய வழக்கம் இல்லை என்று சமூக ஊடக நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.
சமூக ஊடகம் விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அது வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவதுண்டு. இருப்பினும், 'ஷேடோ பேனிங்' தணிக்கைக்கு ஆளாகும் ஒரு பயனாளருக்கு எதுவும் தெரிவிக்கப்படாது.
உதாரணத்திற்கு, இன்ஸ்டகிராமில் 52.5 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட பிரபல அமெரிக்க மாடல் அழகி ஒருவர், தாம் இஸ்ரேல், பாலஸ்தீன மோதல் குறித்து பதிவிட்ட அனைத்தும் அந்த ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தைச் சென்றடையவில்லை என்று கூறி அவை மாயமாகத் தணிக்கை செய்யப்பட்டதாகக் கூறினார்.
இதே தணிக்கை முறைவழி 'கன்சர்வேட்டிவ்' தரப்பினரை டுவிட்டர் தளம் மௌனமாக்கியதாக 2018ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையே, தடைசெய்யப்பட்ட 'ஹேஷ்டேக்கு'களை ஒருவர் தமது இன்ஸ்டகிராம் பதிவுகளில் பயன்படுத்தினால் அவர் 'ஷேடோ பேன்' செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் சமூக ஊடகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடந்துகொள்வதும் சிறப்பு. அனுமதி இன்றிப் பிறரின் பதிவுகளை முடிந்தவரை அப்படியே பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. சமூக ஊடகக் கணக்கு முற்றிலும் அகற்றப்படும் வாய்ப்பும் உண்டு. இவ்வாறு 14 நாள்களுக்கு தணிக்கை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. படம்: அன்ஸ்பிலேஷ்

