திவ்யாதாக்ஷாய்னி
அழகு ராணிப் போட்டிகளில் கலந்துகொள்வது லாவண்யாவின் பலநாள் கனவு. ஆனால், தனது விமானப் பணிப்பெண் வேலையால் அதுபோன்ற போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
சமுதாயத்தில் நிகழும் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கவும் மற்றவர்களுக்கு உதவவும் விரும்பிய லாவண்யா பிரியா, 32, ஒரு சமயம் இன்ஸ்டகிராம் தளத்தில் 'மிஸஸ் சிங்கப்பூர் வோர்ல்டு 2022' அழகு ராணிப் போட்டிக்கான விளம்பரப் பதிவைத் தற்செயலாகப் பார்த்தார்.
அதுவரை சிறு சிறு பிரச்சினைகளுக்குச் சமூக ஊடகத்தின் வழியாக குரல் கொடுத்து வந்த லாவண்யா, மேலும் பலரை எட்ட வேண்டும் என்பதற்காக இப்போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தார். இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையும் லாவண்யாவைச் சேரும்.
கடந்த ஜூன் மாதத்தில் போட்டிக்கான சுற்றுகள் தொடங்கியதாகக் கூறிய இவர், திறன் சுற்றிலும் சமையல் சுற்றிலும் முதலிடத்தைப் பிடித்தார். ஆனால், சமையல் அறையை எட்டிக்கூட பார்க்காதவர் லாவண்யா.
போட்டிக்குத் தயார்செய்வதற்காகவே தன் அண்ணனிடமிருந்து சமையல் கற்றுக்கொண்டார் அவர். வெங்காயம் நறுக்குவதில் தொடங்கி வெவ்வேறு சமையல் முறைகளைக் கையாள்வது வரை அனைத்தையும் ஒரே வாரத்தில் அறிந்தார்.
போட்டிக்காக புகைப்படம் பிடிப்பதற்கு அழகிகள் லங்காவி தீவுக்குச் செல்லவேண்டியிருந்தது. இந்தப் பயணத்தில் தன் மகனும் பங்கேற்க வேண்டும் என்று விரும்பிய லாவண்யா, தன் 8 மாதக் குழந்தையை அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.
ஏற்பாட்டாளர்கள் கொடுக்கும் நேரத்திற்குள் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவும் குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும் தனக்குச் சிரமமாக இருந்தபோதும் போட்டியில் கலந்துகொண்ட மற்ற தாய்மார்கள் கைகொடுத்ததாகக் கூறினார் லாவண்யா.
போட்டி தொடக்கத்திலிருந்து இறுதிவரை பல இன்னல்களைச் சந்தித்தாலும், சற்றும் மனம் தளராமல் லாவண்யா முழு மூச்சுடன் சக போட்டியாளர்களுக்குக் கடும் போட்டி கொடுத்து மூன்றாம் நிலையில் வந்தார்.
ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தைச் சேர்ந்த லாவண்யா, தன் தாயாரிடமிருந்து மனவலிமையின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொண்டதாக் கூறினார். பிறர் உதவியின்றிச் சவால்களை எதிர்கொண்ட தன் தாயாரைப் போலவே தானும் துணிச்சலுடன் நடைபோட வேண்டும் என்று லட்சியம் கொண்டவர் லாவண்யா.
"ஒரு பெண்ணுக்கு அவரின் குடும்பத்தாருடைய ஆதரவு இருக்கலாம். ஆனால் கணவரின் ஆதரவு இருக்கும்போது இந்த உலகையே ஆளலாம் என்ற நம்பிக்கை அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும்," என்று கூறுகிறார் லாவண்யா. போட்டியில் பங்கேற்ற பயணம் முழுக்க தன் கணவர் பெரும் ஆதரவு அளித்ததாகவும் கூறினார்.
குடும்பம், கணவர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி சமூக ஊடகவழி நண்பர் ஆனவர்களும் தனக்கு ஆதரவாய் இருந்தனர் என்று லாவண்யா குறிப்பிட்டார். குழந்தை வந்தபின் மற்ற எதற்கும் நேரம் இருக்காது எனத் தான் கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் நண்பர்கள் கூறியிருந்ததை நினைவுகூர்ந்த லாவண்யா, அதையே தான் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டதாகக் கூறினார்.
"என்ன நடக்கும் என்பதை நம் மனம்தான் முடிவுசெய்யும். ஒரு தாயாக இருந்தாலும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை விருப்பம்போல் வாழலாம். அதில் குழந்தை இடம்பெறுவதாக அமைத்துக்கொள்ளலாம். இது எளிதல்ல, ஆனால் முடியாத காரியமும் அல்ல. குழந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாடுங்கள்," என்றார் அவர்.
அழகும் அறிவும் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட இவர், பாலித் தீவுக்கும் இந்தியாவுக்கும் செல்வதுண்டு. அங்குள்ள வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவது, அவர்களுக்கு உணவளிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்.
"அவர்களின் சிரிப்பில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் கிடைப்பதில்லை," என்று கூறினார் லாவண்யா. உயர்ந்த லட்சியங்கள் கொண்டுள்ள இவர், அழகு ராணிப் போட்டிக்காக பெண்களைத் தயார்படுத்தும் பள்ளி ஒன்றை சிங்கப்பூரில் திறக்க விரும்புகிறார்.

