ஆ. விஷ்ணு வர்தினி
காதலா மக்களா என்ற உள்ளப்
போரும் வாதாபிப் பெரும் போரும் உயிர்பெற்ற 'சிவகாமி' மேடை
நாடகம் பிரம்மாண்டமான முறையில் அரங்கேறியது.
அவாண்ட் நாடகக்குழு படைத்த சிவகாமி, ஆடல், பாடல் ஆகியவற்றை உள்ளடக்கி பார்வையாளர்களை ஈர்த்தது.
இந்நாடகம், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பிரபல 'சிவகாமியின் சபதம்' நாவலைத் தழுவியிருந்தது.
பிரதான கதாநாயகியான சிவகாமியின் வேடமிட்ட நடனமணி மீரா பாலசுப்ரமணியன், தனது
நடனங்களிலும் அபிநயங்களிலும் சிவகாமியின் காதலை, விரக்தியை அழகாகக் காட்டினார்.
'முன்னம் அவன் நாமம் கேட்டேன்' எனத் தொடங்கி மொத்தம் மூன்று பாடல்களைக் குழுவினர் படைத்தனர்.
மகாகவி பாரதியின் கொள்ளுப்பேரன், திரு ராஜ்குமார் பாரதி உட்பட மூன்று இசையமைப்பாளர்
களின் கலைவண்ணத்தால் ஏழாம் நூற்றாண்டில் இருந்த தமிழகச் சூழல் மேடையில் உயிர்பெற்றது.
பல்லவ, சாளுக்கிய மன்னர்
களாக வேடமிட்டோர் எல்லாக் காட்சிகளிலும் கம்பீரம் மாறாது நடித்திருந்தனர்.
குறிப்பாக, புலிகேசியாகவும் புத்த பிக்குவாக மாறுவேடம் பூண்டிருந்த நீலகேசியாகவும் நடித்திருந்த விமலன் இளங்கோவன், குணத்தில் வேறுபட்ட இரு கதாபாத்திரங்களையும் திறம்பட கையாண்டிருந்தார்.
நகைச்சுவை கதாபாத்திரங்
களின் வேடிக்கையான
உடல்மொழியும் பாவனைகளும் நாடகத்தை மேலும் மெருகூட்டின.
ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்த சிவகாமி ஆங்காங்கே தொய்வுற்றிருந்தபோதிலும் முக்கியமான கட்டங்களில் அது
விறுவிறுப்பாகவே இருந்தது.
கண்ணைப் பறிக்கும் திரை
ஓவியங்கள், மேடை ஒளியமைப்பு ஆகியவை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை மகிழ்வூட்டின.
கேட்வே திரையரங்கில் இம்மாதம் 16ஆம், 17ஆம் தேதிகளில் சிவகாமி நாடகம் அரங்கேறியது. 2007ல் அரங்கேறிய 'சிவகாமி' என்னும் நாட்டிய நாடகத்தை ஆங்
கிலத்தில் இயக்கிய அவாண்ட்
நாடகக்குழுவின் இயக்குநர் திரு
க. செல்வா, நீண்ட நாள்களாய் அந்நாடகத்தை தமிழில் மேடையேற்றும் ஆவல் கொண்டிருந்ததாகப் பகிர்ந்துகொண்டார்.
அந்நாடகத்தின் ஆங்கில வசனங்களைத் தமிழாக்கம் செய்தும் நாவலின் போக்கோடு மேலும் ஒத்திசைவு இருக்கும்படியாக தமிழ் வசனங்களை அமைத்தும் கொடுத்த திரு ஸ்ரீகணேஷ், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட காப்பியத்தை நூறு பக்க வசனங்
களுக்குள் எழுதுவதை ஒரு முக்கிய சவாலாக குறிப்பிட்டார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாமி நாடகத்துக்கான தொடக்க வேலைகள் ஆரம்பமாகிஇருந்தன. இந்திய சுதந்திரப் போராட்டம் முடிவடைந்த சமயத்தில் வெளிவந்தது 'சிவகாமியின் சபதம்' நாவல். சிவகாமி வாதாபியிலிருந்து மீண்டு வந்ததை இந்தியாவே சுதந்திரம் அடைந்ததாக கருதி அன்றைய மக்கள் மகிழ்ச்சியடைந்த அனுபவங்களைப் பலர் கூற
கேட்டுள்ளதாகவும் திரு ஸ்ரீகணேஷ் தெரிவித்தார்.

