பொன்மணி உதயகுமார்
சிங்கப்பூரர்கள் தங்கள் நிதி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் ஓய்வு காலத்துக்குத் தேவையான சேமிப்பு, மருத்துவக் காப்பீடு, முதலீடு போன்றவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் உதவும் நோக்கத்துடன் 'மனிஐடியாஸ்' நிதி அறிவுத்திறன் கருத்தரங்கு நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை 24ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை வீடமைப்பு வளர்ச்சிக் கழக மையத்தின் அரங்கத்தில் 'மனிஐடியாஸ்' கருத்தரங்கு இடம்பெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் பல்லின நிதி நிபுணர்கள், சமூக ஊழியர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்ட பேச்சாளர்கள் நிதி சார்ந்த பல குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.
மருத்துவச் செலவுகள், முதலீடுகள், ஓய்வுக்காலம் ஆகியவற்றுக்குத் எவ்வாறு திட்டமிடலாம், பெண்கள் எவ்வாறு சுயமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து வெவ்வேறு அமர்வுகளில் நிபுணர்கள் கலந்துரையாடினர். எம். பி. செல்வம் நிதி ஆலோசகர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு நிதி அறிவுத் திறன் கழகம் ஆதரவு தந்தது.
மூப்படையும் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய நிதிச் சவால்கள், மருத்துவச் செலவுகள் போன்றவற்றை சமாளிக்க உதவும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் நிதியுதவித் திட்டங்கள், மானியங்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ளும்படி சிண்டாவில் பணியாற்றும் சமூக சேவை ஊழியர் அமுதா செல்லய்யா பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார். ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தகுதி வரம்பிற்குள் வராதவர்கள் சிண்டாவின் நிதியுதவித் திட்டங்களை நாடலாம் என்றார் அவர்.
பெண்களின் நிதி முடிவுகள் குறித்த அமர்வில், தங்கள் பணத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இருக்கவேண்டிய அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்தினர். மேலும், ஆண்களைவிட பெண்களின் ஆயுள்காலம் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுவதை சுட்டிய அவர்கள், அதனால் வருங்காலத்தில் தங்களைப் பேணிக்கொள்ள பெண்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றனர்.
பலநாள் கழித்து வேலைக்குத் திரும்பும் பெண்கள், 'கிக் எகானமி' எனப்படும் விரும்பிய நேரத்தில் தற்காலிகப் பணிகளைச் செய்து வருமானத்தை ஈட்டுவது பற்றி பரிசீலிக்கலாம் என்று 'ஸ்டேஷவே' எனும் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி நந்தினி ஜோஷி ஆலோசனை வழங்கினார்.
வேலைக்குத் திரும்பும் பெண்கள் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' பயிற்சி உதவி நிதியை பயன்படுத்தி தங்கள் திறன்களை மேம்படுத்தலாம் என்று டிபிஎஸ் வங்கியின் முதலீட்டுத் துறைத் தலைவர் லோர்னா டான் பரிந்துரைத்தார்.
அதனுடன், செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வரவு செலவுத் திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ளும்படி நிபுணர்கள் பங்கேற்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
"பெண்கள், குறிப்பாக அண்மையில் வேலை பார்க்க தொடங்கியுள்ள இளம்பெண்கள் ஆரம்பத்திலிருந்தே சேமிப்புத் திட்டத்தையும், முதலீட்டுத் திட்டத்தையும் உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும்," என்று இளம் நிதி ஆலோசகர் டி சங்கீதா கூறினார்.
இதன் மூலம், கூடுதல் செலவுகளையும் குடும்பப் பொறுப்புகளையும் கையாளும் பெண்கள் தங்களது நிதியைச் சிறந்த முறையில் கையாளவும் வருமானம் ஈட்டவும் தொடக்கத்திலேயே கற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.
இன்றைய குழப்பமான அரசியல், பொருளியல் சூழலில் சரியான முதலீடுகளில் சிங்கப்பூரர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
சேமிப்புகளை முழுவதுமாக முதலீடு செய்வதைவிட, இழந்தாலும் ஈடுகட்டக்கூடிய தொகையை மட்டுமே முதலீடு செய்யும்படி நிபுணர்கள் அறிவுறுத்தினர்.
அதேபோல, முதலீட்டு அனுபவம் இல்லாதவர்கள், முதலில் சிறிய தொகையில் தொடங்கலாம் என்றும் முதலீடு செய்யும்போது ஒரு திட்டத்தையும் இலக்கையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
கருத்தரங்கிற்கு கணவருடன் வந்திருந்த திருமதி அமுதா, போதிய சேமிப்பு, மருத்துவக் காப்புறுதி, வரவு செலவுத் திட்டமிடுதல் போன்றவற்றை ஏற்கனவே செயல்படுத்தி வந்தாலும் கருத்தரங்கில் ஏன் உயில் எழுதவேண்டும் என்பதன் அவசியத்தைப் புதிதாக அறிந்து கொண்டதாக கூறினார்.
தங்கள் அன்புக்குரியவர்களுக்கு தங்களது உடைமைகள் எளிதாகச் சென்று சேர்வது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
'எல்டர்ஷீல்ட்', 'கேர்ஷீல்ட்' போன்ற திட்டங்கள் குறித்து புதுத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறிய திரு வெற்றிவேலன், குறிப்பாக 'கேர்ஷீல்ட்' திட்டத்தில் வாழ்நாள் வரை காப்புறுதி இருக்கும் என்பது ஆர்வத்தைத் தூண்டியதாகச் சொன்னார். அதோடு, "முதலீடுகள் பற்றி மேலும் விவரமாகத் தெரிந்து கொள்ளவும் மோசடிகளைத் தவிர்க்கும் வழிகளையும் கற்றுக்கொள்ள கருத்தரங்கு வாய்ப்பாக இருந்தது," என்றார்.
வருங்காலத்தில் தன் மகளுக்கு சுமையாக இருந்துவிடக் கூடாது என்ற உறுதியுடன் இருக்கும் திருமதி புஷ்பராணி, 57, "முதியோர் இல்லங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் என்பது இங்கு பேசிய நிபுணர்கள் கூறித்தான் எனக்குத் தெரியும். ஆக, என் ஓய்வுக் காலத்திற்குத் தயாராவதில் நான் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்," என்று சொன்னார்.
போதிய ஆயத்தமும் பிள்ளை களின் ஆதரவும் தமது முதுமைக் காலத்தை நிம்மதியாகச் செலவிட உதவி வருவதாக கூறிய 87 வயது திருவாட்டி மோகனா, கருத்தரங்கில் கலந்துகொள்ள சக்கர நாற்காலியில் ஆர்வத்துடன் வந்திருந்தார்.
கருத்தரங்கில் பேசப்பட்ட தலைப்புகள் மீது தமக்கு ஆர்வம் அதிகம் என்று கூறிய அவர், இதுபோன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள நிதி நிகழ்ச்சிகளில் இளையர்கள் இன்னும் அதிகமாக கலந்துகொண்டு தங்கள் நிதித் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

