மாதங்கி இளங்கோவன்
ஒருவர் தம்மையே நன்கு புரிந்துகொண்டு உள்ளொளியைக் கண்டறியும் பயணத்தைக் கதைக்களம் கொண்டு அமைந்தது, 'அஹம் பிரம்மாஸ்மி' எனும் ஒடிசி நடன நிகழ்ச்சி.
வாழ்க்கையின் வேக ஓட்டத்தில் மாட்டிக்கொள்ளும் மனிதர்கள் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு தங்கள் உள்ளுணர்வுகளையும் மன நிலையையும் பற்றி சிந்திப்பதற்குத் தங்கள் படைப்பின் ஊக்குவித்தனர் 'அஹம் பிரம்மாஸ்மி' நிகழ்ச்சியின் நடனக் கலைஞர்கள்.
ஒடிசி நடனக்கலையில் 36 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இந்து விஜய்யின் நடன இயக்கத்தில் இந்த நிகழ்ச்சி மேடையேற்றப்பட்டது.
கடந்த சனிக்கிழமை 24ஆம் தேதி அன்று தேசிய பல்கலைக்கழகத்தின் கலாசார நிலைய அரங்கத்தில் அது இடம்பெற்றது.
தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவில் பாஸ்கர் கலைக் கழகத்தின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் புனிதம் நிறைந்த அம்சம் உள்ளது என்பதை நாடகம், நடனம் ஆகியவற்றின் வழியாக பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க முயன்றது அந்நிகழ்ச்சி.
நடன அமைப்பாளர் இந்து விஜய், முக்கிய நடனமணியான ஷஹ்ரின் ஜோரி ஆகியோரும் மேலும் நான்கு ஒடிசி நடனமணிகளும் உணர்வுபூர்வமாக நிகழ்ச்சியைப் படைத்திருந்தனர்.
பல்லின வார்ப்பாகவும் நிகழ்ச்சி அமைந்திருந்தது. ஒவ்வொரு நடன அங்கத்துக்கும் பாரம்பரிய ஒடிசி நடன இசை இசைக்கப்பட்டது.
பாடல் வரிகள் ஒரியா மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் இடம்பெற்றன.
சீன இசைக்கருவியான ருவாங்கும் இந்திய பாரம்பரிய இசைக்கருவிகளும் ஒரே மேடையில் வாசிக்கப்பட்டது, இப்படைப்பின் சுவாரசியமான அம்சமாக அமைந்தது.
மேற்கத்திய நவீன நடனம், பரதநாட்டியம் என பல்வேறு நடன வகைகளில் கற்றுத் தேர்ந்த நடனமணி ஷஹ்ரின் ஜோரி, இப்படைப்புக்காகவே ஒடிசி நடனத்தையும் கற்றுக்கொண்டார்.
அவரே அதில் கதைசொல்லியாகவும் நடனமணியாகவும் பங்கெடுத்துள்ளார்.
பரதநாட்டியத்தில் பல்லாண்டு அனுபவம் கொண்ட நடனமணி களுக்கும் நிகழ்ச்சி புதுமையான ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்திருந்தது.
தற்போது ஒடிசி நடன வகுப்புகளுக்கு சென்றுவருகிறார் நிகழ்ச்சியில் ஆடிய பரதநாட்டியக் கலைஞரான ஷிவாஷினி குமார்.
"பரதநாட்டியத்தின் அம்சங்கள் ஒடிசி நடனத்தில் ஊடுருவுவதைத் தவிர்ப்பதற்கு அசைவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இது சவாலாக அமைந்தாலும் முதல்முறையாக மேடையில் ஒடிசி நடனத்தை ஆடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி," என்றார் ஷிவாஷினி.

