உலக இதய தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் அவசியத்தை உணர்த்தும் நாள் இது. இதனை முன்னிட்டு உடற்பயிற்சிக் கூடத்தில் பதிவாகும் மாரடைப்புச் சம்பவங்களைப் பற்றி அறிந்திடுவோம். ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு உடற்பயிற்சி முக்கியம் என்றாலும் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியும் ஒருவரை அபாயத்தில் விட்டுவிடலாம்.
ஒருவரிடம் உள்ள சுறுசுறுப்பு, உடற்பயிற்சியைத் தாங்கும் உடலுறுதி ஆகியவற்றுக்கும் மேல், அவரது இதயம் இயங்கும் நிலையைப் பொறுத்தே உடற்பயிற்சி அமையவேண்டும். உடற்பயிற்சிக் கூடத்திற்குள் கால் வைத்தவுடன் பாரந்தூக்குவதும் கடுமையான உடற்கட்டு பயிற்சிகளைச் செய்வதுமாக இறங்கிவிடக்கூடாது. நம் இதய இயக்க நிலை, நமது ஆரோக்கிய நிலை ஆகியவற்றை மனதில் கொண்டு உடற்பயிற்சித் திட்டத்தை உருவாக்குவது அவசியம்.
சுகாதாரப் பிரச்சினைகளை அறிதல்
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் இதயம் தொடர்பான நோய் போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தால் ஒருவர் உடற்பயிற்சிக் கூடத்தில் எச்சரிக்கையுடன் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லையேல், தவறான உடற்பயிற்சிகளைச் செய்து உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கான
அடிப்படைச் சோதனைகள் முக்கியம்
அடிப்படையான சுகாதாரச் சோதனைகளான 'இசிஜி', 'இசிஎச்' ஆகியவற்றைச் செய்துகொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் தனக்கு உள்ளதா என்பதை ஒருவர் கண்டறிந்து கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.
உணவுமுறையிலும் கவனம் தேவை
ஒருவர் தனது உணவுமுறைமீதும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். இதயத்துக்குத் தோதான உணவுப் பழக்கங்களை மேற்கொள்வது சிறப்பு. இளையர்கள் மருந்து மாத்திரைகள்வழி தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தாமல் இயற்கைப் பொருள் சார்ந்த உணவை நாடலாம்.

