சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பனுக்குச் 'சிங்கை எழுத்துச் சிற்பி' பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற அவரது பவள விழாவில் அந்தப் பட்டம் வழங்கப்பட்டது. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகச் சார்புநிலைப் பேராசிரியர் சுப. திண்ணப்பன் உள்ளிட்ட விழா ஏற்பாட்டுக் குழுவினர் அந்தப் பட்டத்தை வழங்கினர்.
ஏற்புரை ஆற்றிய திரு. ஆண்டியப்பன் தமது இலக்கிய, பொதுச் சேவை வளர்ச்சிக்குக் காரணம் எழுத்தாளர் கழகம் என்று கூறினார். அத்துடன் 1990களில் எழுத்தாளர் கழகத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கிய அப்போதைய தலைவர் கவிஞரேறு அமலதாசன், துணைத் தலைவர் திரு வை. சுதர்மன், செயலாளர் பாத்தேறல் இளமாறன் ஆகியோருக்கும் அவர்களிடம் தம்மை அறிமுகப்படுத்திய திரு பொன். சுந்தரராசுவிற்கும் நன்றி தெரிவித்தார்.
எழுத்தாளர் கழகம் சவால்களையும் சிக்கல்களையும் சந்தித்தபோது உதவி செய்த போப் ராஜூக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

