ஆ. விஷ்ணு வர்தினி
முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படம் பிடிக்கப்பட்டு, மாறிவரும் நவீனமயமான சூழலில் இன்றைய இளம் தலைமுறையினர் காதல் கொள்ளும் விதத்தைச் சித்திரிக்கவுள்ளது 'காதலிசம்' திரைப்படம்.
தீபாவளி ஒளியூட்டு, ஹீலிக்ஸ் பாலம், செந்தோசா தீவு ஆகியவற்றில் படமாக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ள இத்திரைப்படத்தின் 'உன்னாலே' பாடலைப் படக்குழுவினர் கடந்த வாரம் வெளியிட்டனர்.
சிங்கப்பூரின் அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியையும் தமிழுக்கும் அதன் அடையாளத்துக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் 'உன்னாலே' பாடலில் காட்ட சிரத்தை எடுத்துள்ளதாக இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன் கூறினார்.
யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட 'உன்னாலே' பாடல், படத்தில் வரும் இரு காதலர்கள் பிரிந்து இருக்கக்கூடிய சூழ்நிலையைக் காட்டுகிறது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான திரு சந்தோஷ், கலைநகரமான சிங்கப்பூரின் அழகை தாம் பெரிதும் ரசிப்பதாகக் கூறினார். அதனால், இத்தகைய சுதந்திரமான, அதிநவீன நகரில் மலரும் காதலை மட்டும் காட்டாமல், சிங்கப்பூரின் அழகையும் திரைக்குக் கொண்டுவர தாம் முயற்சி செய்துள்ளதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குமுன் 'காதலிசம்' திரைப்படத்துக்கான வேலைகள் தொடங்கி இருந்தன. நடிகர்கள், படக்குழுவினர் என மொத்தம் 32 பேர் இத்திரைப்படத்தில் ஈடுபட்டு உள்ளனர். பகுதிநேர நடிகர்கள், நாடகக் கலைஞர்கள் என படக்குழுவினரில் பெரும்பாலானோர் சிங்கப்பூர்வாழ் மக்களே என்று குறிப்பிட்டார் இயக்குநர். இந்த ஆண்டிறுதியில் 'ஓடிடி' தளங்களில் இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டம் கொண்டுள்ளது.

