செட்டியார் கோயில் குழுமம் இம்மாதம் 2ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த மெதுநடை ஓட்டத்திற்கு முன்னதாக ஆயத்த உடற்பயிற்சி இடம்பெற்றது.
ஏறத்தாழ 500 பேர் கலந்துகொண்ட மெதுநடை ஓட்டம், காலை 7.30 மணியளவில் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் வளாகத்திலிருந்து தொடங்கி ரிவர்வேலி ரோடு, சிங்கப்பூர் ஆற்றங்கரை வழியாக சென்று மீண்டும் தேங் ரோட்டில் முடிவுற்றது.
மெதுநடை ஓட்டத்தை சுவா சூ காங்கில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்கு கல்லூரியின் உடற்கல்வி விரிவுரையாளர் எஸ்.ராமசாமி வழிநடத்தினார்.
மெதுநடை ஓட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை வந்துவிட்டது. அதை எதிர்பார்த்த ஏற்பாட்டாளர்கள் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மழை அங்கியை வழங்கினர். அனைவரும் அதை அணிந்து மெதுநடை ஓட்டத்தைத் தொடர்ந்தனர்.
பல இன சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் பலரும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்வத்துடன் கலந்துகொண்டது நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தது.
தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஆலய மேலாண்மைக் குழுவின் தலைவர் சண்முகம் தமது வரவேற்பு உரையில், பல இன சமுதாயத்திற்கு ஆலயம் அறப்பணிகள் செய்து வருவது குறித்துப் பேசினார்.
பல இன சமுதாயத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது வரவேற்கத்தக்கது என்றார் அவர்.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஆலயம் இந்தச் சமூக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது என்றும் உதவி தேவைப்படும் பிற தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உடற்குறையுள்ள அறுவருக்கு இவ்வாண்டு இயந்திர சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
இயந்திர சக்கர நாற்காலி கிடைப்பதற்குமுன், இவர்கள் வெளியில் செல்வதற்கு மற்ற ஒருவரின் உதவியை நாடவேண்டியிருந்தது. ஆனால், இனி அடுத்தவரின் துணையின்றி வெளியில் சென்று வர சக்கர நாற்காலி உதவியாக இருக்கும் என்று அவர்கள் கூறினர்.
மெதுநடை ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அன்பளிப்புப் பைகள், டீ-சட்டை, அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
சிங்கப்பூரின் ஆரோக்கிய வாழ்க்கைமுறை திட்டத்தை ஒட்டியும் உடல்நலத்தைப் பேணும் கருத்தை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.