ஆ. விஷ்ணு வர்தினி
சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் பங்குபெறும் 'எக்சர்சைஸ் வாலபி' பயிற்சி, ஈராண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு, 32வது முறையாக முழுவீச்சில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் 4,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ராணுவ வீரர்களும் 360க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலம், ஷோல்வாட்டார் பே பயிற்சித் தளத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 11ஆம் தேதிவரை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஷோல்வாட்டார் பே பகுதி, சிங்கப்பூரைவிட நான்கு மடங்கு அதிக நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
1990லிருந்து நடைபெற்றுவரும் 'எக்சர்சைஸ் வாலபி', சிங்கப்பூர் ஆயுதப்படையின் ஆகப்பெரிய வெளிநாட்டுப் பயிற்சியாகும். இவ்வாண்டின் பயிற்சியில், ராணுவ வேவுத்துறை குழுக்களால் இயக்கப்படும் 'வெலோஸ்-15' ஆளில்லா வான்வெளி வாகனம் அறிமுகம் கண்டது.
அப்பாச்சி விமானங்களுடனான 'கொ-ஆப்பரேட்டிவ் லேசிங்' எனப்படும் இயக்கமுறை உட்பட பல்வேறு போர்க்கால உத்திகளை உள்ளூரில் பயிற்சிக்கு உட்படுத்த முடியாது. எனவே, அவற்றை 'எக்சர்சைஸ் வாலபி'யில் மேற்கொண்டு வருகிறது சிங்கப்பூர் ராணுவம்.
கடந்த சில ஆண்டுகளாக ஆளில்லா வான்வெளி வாகன தளபத்தியமானது, செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றை பயன்படுத்தக்கூடிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 'மொபைல் இமேஜரி டிசேமினேஷன்' எனப்படும் புது அமைப்பு, இலக்குகளை எளிதில் கண்டறிய உதவுவதாக குறிப்பிட்டார் ஹெரான்-1 விமானியான திரு அர்ஜூன் ராதாகிருஷ்ணன். இதுபோன்ற புது தொழில்நுட்பங்களும் 'எக்சர்சைஸ் வாலபி'யில் சோதித்துப் பார்க்கப்பட்டன.
"மாறுபட்ட நில அமைப்பும் பலமான காற்றும் உள்ள ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொள்வது, பரிச்சயம் இல்லாத இடங்களில் விமானம் இயக்கும் திறனை மெருகூட்ட உதவியுள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு செயல்முறைகளைப் பின்பற்றுவது முதலியவற்றிலும் எங்களை மேம்படுத்திக்கொள்ள இப்பயிற்சி வாய்ப்பளித்துள்ளது," என்றார் திரு அர்ஜூன்.
இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட எக்சர்சைஸ் வாலபியின் இரண்டாம் பகுதி அண்மையில் முடிவடைந்தது. இதில், ராணுவ காவல் பிரிவு, ராணுவ வேவுத்துறை பிரிவுகள், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் போர் விமானம் ஆகியவை ஈடுபட்டன. கடந்த மாதம் நிறைவடைந்த முதல் பகுதியில், கவச, போக்குவரத்துப் பிரிவுகள் பயிற்சி மேற்கொண்டன.
முதல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்ட சிஎச்-47 சினூக் ஹெலிகாப்டர் விமானிகளுக்கு, அவற்றை விமானந்தாங்கி கப்பல்களில் பாதுகாப்பாக இறக்க உதவும் நிபுணராக செயலாற்றினார் திரு ஜெரமி நெல்சன்.
இரவில் ஹெலிகாப்டரை சரிவர இயக்குவதில் இவர் பல சவால்களை எதிர்கொண்டார். தொடர் பயிற்சிகளின்மூலம் இந்த இயக்க முறை தமக்குப் பழக்கமாகியதாக இவர் கூறினார்.
வானிலை பகலில் மிக வெப்பமாகவும் இரவில் குளிராகவும் இருக்கும். ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் சிலரிடம் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் தென்பட்டன. எக்சர்சைஸ் வாலபியில் முதல் முறையாக பங்குபெற்ற மருத்துவ தாதி கோவிந்தராஜ் யோகேஷ், ராணுவ வீரர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும்போது அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பல படிப்பினைகளைப் பயிற்சியின் மூலம் தாம் பெற்றுக்கொண்டதாக இவர் கூறினார். பரபரப்பான சூழலில் மேலதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்ததாகவும் யோகேஷ் கூறினார்.
ஆஸ்திரேலிய தற்காப்புப் படையும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் இணைந்து நில, கடல் பயிற்சிகளில் ஈடுபட்ட 'எக்சர்சைஸ் டிரைடண்ட்' செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 3ஆம் தேதிவரை நடைபெற்றது.
கொவிட்-19 சூழல் காரணமாக 2020ல் ரத்து செய்யப்பட்ட எக்சர்சைஸ் வாலபி, கடந்த சிறிய அளவில் நடைபெற்றது. இம்முறை, கொவிட்-19க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டது சிங்கப்பூர் ஆயுதப் படை.