சிங்கப்பூரர்கள் உணவில் உப்பைக் குறைக்க வேண்டிய சூழலில் உள்ளார்கள். அதுவும் தீபாவளியும் அதன் கூடவே விருந்துகளும் வரும் நேரத்தில் உப்பைக் குறைப்பது முக்கியம்.
உப்பு குறைவான உணவை ஏற்றுக்கொள்வதற்கு நாவைப் பழக்கலாம் என்று சாங்கி பொது மருத்துவமனையின் உணவுமுறைத் துறைத் தலைவர் திருவாட்டி ஓங் லி ஜியுவென், 43, கூறினார். ஒரு மாதத்துக்கு இதைச் சவாலாகவே செய்துபார்க்கும்படி ஊக்குவித்தார்.
உப்பு குறைவான உணவு வகைகளைத் தேர்வு செய்யலாம் என்பது அவரது பரிந்துரை. குறிப்பாக வீட்டுச் சமையலை அதிகரித்து உப்பு அல்லது சுவையூட்டிகள் போன்றவற்றைக் குறைக்கலாம் என்று அவர் கூறினார்.
புதிதாக வாங்கும் காய்கறிகளே உணவுக்குச் சுவைகூட்டும் என்றார் திருவாட்டி ஓங். ஒரு மாதத்தில் நாக்கு பழகிக்கொண்டு உப்பை ஒதுக்கித் தள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.
வீட்டுச் சமையலில் உப்பைக் குறைத்து அதற்கு பதிலாக எலுமிச்சைப் பழம் அல்லது பூண்டைச் சேர்த்து உணவுக்குச் சுவையூட்ட முடியும் என்று சிங்கப்பூர் சத்துணவு, உணவுமுறைச் சங்கத்தின் தலைவர் டாக்டர் கல்பனா பாஸ் கரன் குறிப்பிட்டார். இரத்தச் சர்க்கரை குறியீட்டு தொடர்பான தெமாசெக் பலதுறைத் தொழில்கல்லூரியின் ஆய்வுத் துறைக்கு அவர் தலைமை வகிக்கிறார்.
கொழுப்பு அதிகம் இல்லாத இறைச்சியை உணவில் சேர்க்கும்போது, சுவை இருக்கும் அதே வேளையில் உணவில் உப்பையும் கொழுப்பையும் ஒருசேரக் குறைக்கலாம் என்று அவர் கூறினார்.
கூ டேக் புவாட் மருத்துவ மனையைச் சேர்ந்த சத்துணவு நிபுணர் சியூ யூ யாவ், 27, கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், மல்லித் தழை, பிரிஞ்சி இலை போன்றவற்றைப் பயன்படுத்தும்படி பரிந்துரைத்தார். இவை எல்லாம் இந்தியர்கள் உணவில் அதிகம் பயன்படுத்துபவை என்பது குறிப்பிடத்தக்கது.
உப்புக்கு மாற்றான சில உணவு வகைகளைப் பார்க்கலாம்.
சோளம்
'சூப்' வகைகளுக்கு இனிப்புச் சுவையைத் தரும் சோளத்தில், 'பி1' உயிர்ச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளன.
தயிர்
குழம்புகளில் தேங்காய்ப் பாலுக்கு பதில் தயிரைச் சேர்க்கலாம். சாலட் போன்ற உணவுகளில் மயோனீஸ் சேர்க்காமல் தயிர் சேர்த்தால் தனிச்சுவை இருக்கும்.
செலரி
உணவில் செலரி இலைகளையும் தண்டுகளையும் சேர்த்தால் சுவையும் நறுமணமும் கூடும். 'ஏ', 'சி' வகை உயிர்ச்சத்துகள், தாதுப்பொருள்கள், நோய் எதிர்ப்புப் பொருள்கள் ஆகியவை நிறைந்தது செலரி.
கேரட்
காய்கறிப் பிரட்டல், சூப், பல நேரங்களில் குழம்பு ஆகியவற்றில் நாம் பயன்படுத்தும் கேரட்டில் 'ஏ' வகை உயிர்ச்சத்து, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து போன்றவை உள்ளன. ஆனால் சர்க்கரை உள்ளதால் இதை உணவில் சேர்க்கும்போது கவனம் தேவை.
எலுமிச்சை
சமையலில் உப்பு தூக்கலாக இருக்கும் பல நேரங்களில் கைகொடுப்பது எலுமிச்சைதான். எலுமிச்சை சாரு பிழிந்து ஊற்றினால் உப்புச் சுவை மட்டுப்படும்.
உப்பைக் குறைக்கும்போதும் உணவுக்குச் சுவையூட்ட அதே எலுமிச்சையைப் பயன்படுத்தலாம்.
தக்காளி, வெங்காயம்
இந்திய உணவுக்குப் பக்கபலமாக இருக்கும் தக்காளியும் வெங்காயமும் உப்பு குறைவாக இருப்பதை மறைத்துவிட உதவும்.
மேலும் தக்காளியில் லைக்கோபென் எனும் நோய் எதிர்ப்புப் பொருள்களும் 'கே' வகை உயிர்ச்சத்தும் உள்ளன. பல்வகை உயிர்ச்சத்துகளும் அமிேனா அமிலங்களும் நிறைந்தது வெங்காயம். குறிப்பாக வெங்காயத்தில் உள்ள குளூட்டமேட் எனப்படும் அமினோ அமிலம்தான் வெங்காயத்தின் சுவைக்குக் காரணமாக உள்ளது.
காளான்
வெங்காயத்தில் உள்ள குளூட்டமேட் அமினோ அமிலத்துடன், 'பி' வகை உயிர்ச்சத்து, நோய் எதிர்ப்புப் பொருள்கள், ஃபோலேட் போன்ற சத்துகளும் காளானில் உள்ளன.
மணமூட்டிகள்
மல்லி, சீரகம், மஞ்சள் ஆகியவற்றின் நன்மைகளும் சுவையும் நாம் அறிந்ததே. ஆனால் கரம் மசாலாவைப் பயன்படுத்தும்போது அதில் உப்பின் அளவைப் பார்க்க வேண்டும். உப்பு குறைவாக அல்லது உப்பில்லாததைத் தேர்வு செய்யும்படி நிபுணர்கள் கூறுகின்றனர்.
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியைத் தூக்கிப் போடும் காலம் வந்துவிட்டது. சோடியம் குறைவான உணவு வகைகளுக்கு மாறும்படி சுகாதார மேம்பாட்டு வாரியம் சிங்கப்பூரர்களை ஊக்குவித்து வருகிறது.
சுவையும் குன்றாமல், உணவில் உப்பைக் குறைக்கும் பல்வேறு மாற்று உணவுவகைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

