பெண் மலட்டுத்தன்மை, கருப்பை இல்லாமை, கரு வளருவதில் சிக்கல், பெண் உறுப்பு வளர்ச்சியின்மை, அடிக்கடி கருச்சிதைவு கொண்டிருக்கும் பெண்கள் போன்றோருக்கு வாடகைத்தாய் சிறந்த தீர்வாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் சில சிக்கல்கள் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் டி.கே. காமராஜ் கூறியிருப்பதாக 'சமயம்' இணையச் சஞ்சிகை வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவில் வாடகைத்தாய் குறித்து சர்ச்சைகள் வெடித்தபோது பல குழப்பங்கள் ஏற்பட்டன. அப்போது, சட்டம் நுழைந்து வாடகைத்தாயை வியாபார நோக்கத்தில் செய்யக் கூடாது என்று தடை விதித்தது. இன்னும் சில சட்டங் களும் விதிக்கப்பட்டன.
அதன்படி வெளிநாட்டினருக்கு வாடகைத்தாய் சிகிச்சை இங்கு செய்யக்கூடாது.
பெண் குழந்தை பெற்றுக் கொள்ள தகுதியிருக்கும் பட்சத்தில் அவருக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுத்தர சிகிச்சை செய்யக்கூடாது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை சுமக்கும் பெண்கள் அவர்களது இரத்த சம்பந்தமாகவோ உறவினாராகவோ இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஆரோக்கியமான கருமுட்டையையும் ஆரோக்கியமான விந்தணுவையும் இணைத்து ஒரு பெண்ணின் கருப்பையில் பொருத்தி கருவை வளரவிடும் நிலையில் கருவின் ஆரோக்கிய வளர்ச்சி என்பது குழந்தையைச் சுமக்கும் பெண்ணிடம் தான் உண்டு.
கர்ப்பிணிகளுக்கு உரிய ஊட்டச் சத்துக்கள் குறைபாடில்லாமல் இருக்க வேண்டும்.
கர்ப்பகால உணவுகள் குறிப்பாக கருவின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் கர்ப்பிணிகளுக்கு தேவைப்படும்.
அதை தவிர்க்கும்போது அது குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டு செய்யலாம்.
வாடகைத்தாயாக தேர்வு செய்யும் பெண்ணின் உடல் ஆரோக்கியம் குறித்து முழுப் பரிசோதனை செய்வார்கள் என்றாலும் கர்ப்ப காலத்தில் அப்பெண்ணுக்கு ஏதேனும் நோய்த்தொற்று வந்தால் கர்ப்பகால நோய் பாதிப்பு வந்தால் அதை அலட்சியம் செய்யும்போது அல்லது கவனிக்காதபோது அதை குழந்தையை பாதிக்கச்செய்யும்.
கர்ப்பகால நீரிழிவு, கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், காச நோய், பால்வினை நோய் போன்றவை கூட குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்த லாம்.
குழந்தையின் மரபணு உண்மையான தாய் தந்தையை ஒத்து இருக்கும் என்பதில் மாற்றமில்லை. ஆனால் குழந்தையின் மன ஆரோக்கியம் என்பது வயிற்றில் சுமக்கும் பெண்ணை ஒத்து இருக்கக்கூடும்.
வாடகைத்தாய் பெண் மனரீதியாக அழுத்தத்தை சந்தித்தால் அது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
வாடகைத்தாய் வயிற்றில் வளரும் குழந்தை உடல் ரீதியாக ஏதேனும் குறைபாடு இருந்தால் அந்தக் குழந்தையை வளர்க்க குழந்தைக்குரியவரும், குழந்தையைச் சுமந்த வரும் முன்வர தயங்குவார்கள். இந்நிலையில் அந்த குழந்தை தனித்து விடப்பட வாய்ப்புள்ளது.
வாடகைத்தாய் என்பவள் கருவைச் சுமந்து பெற்றெடுத்து கையில் கொடுத்துவிடுவதோடு சரி. அதன்பிறகு அவருக்கும் அந்த குழந்தைக்கும் எவ்வித உரிமையும் கிடையாது.
எனினும் சமயங்களில் சில பெண்கள் குழந்தையைத் தர மறுப் பார்கள் அல்லது வளர்ந்த பிறகு அக்குழந்தையை உரிமை கோரி பிரச்சினை செய்வார்கள்.
அதனால்தான் கருவைச் சுமக்கும் பெண்ணுக்கும், குழந்தையின் உரிமையைக் கொண்ட தம்பதியருக்கும் தொடர்பு இல்லாமல் இந்த சிகிச்சை செய்யப்படும்.
இத்தகைய வாடகைத்தாயாக தேர்ந்தெடுக்கப்படும் பெண்களைத் தேர்வு செய்யும்போது இரண்டு குழந்தைகள் பெற்ற பெண்ணாகவே பெரும்பாலும் தேர்வுசெய்ய காரணமும் பெண்ணுக்கு குழந்தை மீது பற்றுவரக்கூடாது என்பதுதான்.
குழந்தையைச் சுமக்கும் பெண் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் இருவருக்கும் நெருக்கம் உண்டாகி அப்பெண்ணே குழந்தையை வைத்துகொள்ள விரும்பலாம்.
குழந்தையின் உரிமயாளர்கள் விரும்பினால் தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்கலாம்.
பெரும்பாலும் தம்பதியர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப் பதை அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயத்தில் தாய்ப்பால் குடிக்காமல் வளரும் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.
சரியான ஊட்டமும் சிகிச்சையும் ஆரோக்கியமான வளர்ப்பு முறையும்தான் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
(சமயம் தமிழில் எஸ். தனலட்சுமி என்பவர் எழுதிய கட்டுரையின் சுருக்கம்)

