சான் பிரான்சிஸ்கோ: கடவுச் சொல்லைத் திருடும் செயலி பற்றி ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடவுச்சொல்லைக் களவாடும் வகையில் திறன்பேசிகளுக்கான செயலிகள் பயன்பாட்டில் விடப்பட்டுள்ளதாகவும் அவற்றின் மூலம் ஃபேஸ்புக் பயனாளர்களின் கடவுச் சொல் களவாடப்படலாம் என்றும் ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும், கடவுச்சொல்லைக் களவாடும் 400க்கு மேற்பட்ட 'தீங்கிழைக்கும் செயலிகள்' அடையாளம் காணப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயலிகள் ஆப்பிள், ஆண்ட்ராய்ட் என இரண்டு இயக்க மென்பொருள்களிலும் இயங்கக்கூடிய திறன்பேசிகளுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளன. அவை 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' மற்றும் 'கூகள் பிளேஸ்டோர்' ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளன என்றும் அந்நிறுவனத்தின், 'அச்சுறுத்தல் மற்றும் தடைச் சேவை'க்கான இயக்குநர் அக்ரானோவிச் தெரிவித்துள்ளார்.
கூகள் பிளே ஸ்டோர்ஸ், ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் ஃபோட்டோ எடிட்டர், கேம்ஸ், விபிஎன் சர்வீசஸ், பிசினஸ் ஆப்ஸ் என்று பலதுறை சார்ந்த பெயர்களிலும் பயனாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் உலா வருகின்றன என்று மெட்டா தனது பிளாக் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முயற்சி செய்யும்போது, பயனாளர்களின் ஃபேஸ்புக் கணக்கு விவரங்களுடன் செயலிக்கு இணையம் வழி நுழைந்தால் முழுமையாக இந்தச் செயலியின் செயல்பாடுகளைப் பயன்படுத்தலாம் என்று அச்செயலிகள் உத்தரவாதம் அளிக்கின்றன.
பயனாளர்கள் அந்தச் செயலியின் சில முக்கியமான அம்சங்களைப் பயன்படுத்தும் விருப்பத்தின்பேரில், அவர்களது ஃபேஸ்புக் கணக்கின் விவரங்களைப் பயன்படுத்தி செயலியின் இணைய வாசலுக்குள் நுழைகின்றனர். அப்போது அந்தச் செயலி மூலம் கடவுச்சொல் உள்ளிட்ட முக்கிய ரகசியத் தகவல்கள் களவாடப்படுகின்றன.
இணைய ஊடுருவல்காரர்கள், பயனாளர்களின் ஃபேஸ்புக் கணக்கு குறித்த தகவல்களை அடைய உதவும் வகையில், செயலியில் ஃபேஸ்புக் உள்நுழைவுத் தகவலைப் பதியுமாறு கேட்டு பயனாளர்களை ஏமாற்றி, கடவுச்சொல்லைக் களவாடுகின்றனர் என்று அக்ரானோவிச் கூறினார்.
இதுகுறித்து மில்லியன் கணக்கான பயனாளர்களுக்கு அறிவிக்கப்போவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயலிகளை நம்பி இதுவரை ஆயிரக்கணக்கான பயனாளர்கள் ஏமாந்து தங்கள் தகவல்களைக் கசியவிட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அடையாளம் காணப்பட்ட தீங்கிழைக்கும் செயலிகளில் 40 விழுக்காட்டு செயலிகள், திறன்பேசிக்குள் ஊடுருவி அதிலுள்ள படங்களைத் திருத்தியமைக்கும் திறன்வாய்ந்தவை என்றும் அவர் கூறினார். இதுபோன்ற செயலிகளை உருவாக்கியவர்கள் மின்மடல் உள்ளிட்ட மற்ற ரகசியத் தகவல்களையும் களவாட முயற்சி செய்யக்கூடும் என்று எண்ணுவதாக அக்ரானோவிச் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஆப்பிள் நிறுவனம், மெட்டா நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்ட 400 செயலிகளில் 45 செயலிகள் நீக்கப்பட்டு விட்டதாகக் கூறியது. அதேபோல் கூகள் நிறுவனமும், தீங்கிழைக்கும் செயலிகளில் அதிகமானவற்றை நீக்கிவிட்டதாகக் கூறியுள்ளது. இதுபோன்ற கேடிழைக்கும் செயலிகள் பயனாளர்களை அணுகாத வகையில் கூகள்பிளே தடுத்துப் பாதுகாப்பு அளிப்பதாக கூகள் பேச்சாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

