நம்மைச் சுற்றி இருக்கும் பொது இடங்களிலும் கலை புகுத்தப்படலாம் என்பதை எடுத்துரைப்பதையும் அவற்றை பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அணுகக்கூடியதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த ஆண்டின் 'நட்டாஷா' கண்காட்சி.
சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் ஏற்பாட்டில் ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிங்கப்பூர் கலைக் கண்காட்சியை முன்னிட்டு, சிங்கப்பூரின் பல இடங்களில் இடம்பெறவிருக்கும் 'நட்டாஷா' கண்காட்சி, நாளை (அக்டோபர் 16) தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வரை நீடிக்கும்.
சிங்கப்பூர் தேசிய கலைமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சி இம்முறை கூடுதலாக மூன்று இடங்களில் இடம்பெறும்.
மேலும், தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க், செந் தோசா கோவ், செயின்ட் ஜான்ஸ் தீவு, லாசரஸ் தீவு, யான் கிட் பிளேஃபீல்ட், பொது நூலகங்கள், அன்றாட இடங்கள், பாரம்பரிய கேலரி அமைப்புகள் ஆகிய இடங்களோடு, புதிதாக இண்டர்நேஷனல் பிளாசா, சிங்கப்பூர் ராட்டினம், 22 ஆர்ச்சர்ட் சாலை ஆகியனவும் கண்காட்சியின் கலை அம்சங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
"நட்டாஷாவின் அனுபவத்தை மாறுபட்டதாகப் படைக்கவும் மக்கள் தாங்கள் எதிர்பாராத இடங்களில் கலையை ரசிக்கவும் இந்தக் கண்காட்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அதோடு, பார்வையாளர்கள் கலை பற்றிய தங்கள் சிந்தனையை விரிவுபடுத்தவும் வளர்த்துக்கொள்ளவும் கலையை அவர் களது தினசரி வாழ்க்கையோடு தொடர்புப்படுத்திக்கொள்ளவும்தான் இண்டர்நேஷனல் பிளாசா, சிங்கப்பூர் ராட்டினம், 22 ஆர்ச்சர்ட் சாலை ஆகியன கலைக்கான இடங்களாக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன," என்று இணை கலை இயக்குநர்கள் பின்னா சோய், நிடா கவுஸ், ஜூன் யாப், அலா யூனிஸ் ஆகியோர் குறிப்பிட்டனர்.
செந்தோசா வளர்ச்சிக் கழகம் மற்றும் சிங்கப்பூர் நில ஆணையத்தின் ஆதரவோடு நடைபெறும் 'நட்டாஷா' கண்காட்சி, பார்வையாளர்களை சிங்கப்பூரின் கடற்கரையைத் தாண்டி தெற்குத் தீவுகளுக்கு அழைத்துச் செல்லும் என்றும் இயற்கை, சமூக நடைமுறைகள், உறவுகளுடன் ஈடுபடும் கலைத் திட்டங்கள் போன்றவற்றை பிரதி
பலிக்கும் ஆறு வித்தியாசமான படைப்புகளை பார்வையாளர்கள் காணலாம் என்றும் இணை கலை இயக்குநர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை பார்வையாளர்கள் தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் மூன்று தலங்களுக்குச் சென்று சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியா, ஆசியா-பசிபிக், மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களின் கைவண்ணத்தைக் கண்டுகளிக்கலாம்.
அந்தந்த சூழல்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட கலைப்படைப்புகள், காணொளிகள், பங்கேற்புப் பட்டறைகள் போன்றவை பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமையும்.
"தொடக்கத்திலிருந்து, சிங்கப்பூர் கலைக் கண்காட்சி சிங்கையில் உள்ள கலைத்திறன்களை எடுத்துக்காட்டுவதில் முக்கிய பங்களிக்கிறது. சிங்கப்பூர் பார்வையாளர்களின் பொதுவான கலை ஈடுபாட்டையும் கலை ரசனையையும் வளர்ப்பதற்கு ஒரு முக்கிய தளமாக அமைந்திருக்கிறது இக்கண்காட்சி," என்று கூறினார் சிங்கப்பூர் தேசிய கலைமன்றத்தின் துறை மேம்பாட்டுத் துணை தலைமை நிர்வாக அதிகாரி லோ எங் தியோங்.
இந்தக் கண்காட்சி 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ள சிங்கப்பூர் கலைத் திட்டத்திற்கு உதவி கரமாக அமையும் என்றும் தேசிய கலைமன்றம் பல நிறுவனங்களுடனும் அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து சிங்கப்பூர் கலை சமூகத்தை வலியுறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்காட்சி பற்றி மேலும் தகவல் பெற, சிங்கப்பூர் கலைக் கண்காட்சியின் இணையத்தளத்தையும் சமூக ஊடகங்களையும் நாடலாம்.

