காயத்திரி காந்தி
மார்சிலிங் ரைசில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகிருஷ்ணா ஆலயமும் அதன் அருகில் உள்ள மார்சிலிங் சந்தையும் தீபாவளியை முன்னிட்டு இம்மாதம் 15ஆம் தேதி முதல் வண்ண விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மிளிர்கின்றன.
மார்சிலிங் வணிகர்கள் சங்கம், அடித்தள அமைப்புகள், மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஆகியவை இணைந்து இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கண்கவர் ஒளியூட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
மனிதவள, தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது கடந்த சனிக்கிழமை மாலை கோயிலில் மின்விளக்குகளையும் பன்னோக்கு மண்டபத்தில் பாரம்பரிய தீபத்தையும் ஏற்றிவைத்து ஒளியூட்டை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். பின்னர் மார்சிலிங் சந்தைக்குச் சென்று அங்குள்ள விளக்குகளுக்கு ஒளியூட்டினார்.
"கடந்த ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட நான்கு மாடி இணைப்புக் கட்டடம், இந்து சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பலவிதமான நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பாகச் சேவை செய்து வருகிறது," என்றார் அவர்.
நிகழ்ச்சியில், ஆலய நடனக் குழுவினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
"இந்த ஆண்டு நவம்பர் முதல் ஆலயத்தின் 60ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கின்றன. அதன் முன்னோட்டமாக தீபாவளிக்கு இந்த ஒளியூட்டை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று கூறினார் ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் த. சுரேஷ் குமார்.
வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் கொண்டாட்டங்களில் இணையும் இத்தகைய போக்கு, சமூக நல்லிணக்கத்தைப் பேணும் நாடாக சிங்கப்பூர் இருப்பதைப் பறைசாற்றுகிறது என்றார் அவர்.

