நாளெல்லாம் ஓடியாடி வேலைசெய்து களைத்துப் போனாலும் கண்மூடிப் படுக்கையில் படுத்தால் தூக்கமே வருவதில்லை என்று புலம்புவோர் பலர்.
வயது வித்தியாசமின்றிப் பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். இத்தகையோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது 'ராணுவ தூக்கமுறை'.
'ரிலாக்ஸ் அண்ட் வின்: சாம்பியன்ஷிப் பெர்ஃபாமன்ஸ்' எனும் நூலில் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் விமானிகளுக்கான பயிற்சிப்பள்ளி இதனைப் பின்பற்றுவதாகவும் இதன்மூலம் இரண்டே நிமிடங்களில் ஒருவர் உறங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
எளிமையான சில நடவடிக்கைகள் மூலம், தூங்காத கண்களும் உறக்கத்தில் சொக்கிப்போகுமாம்.
1. முதலில் முகத்தின் அனைத்து தசைகளையும் தளர்த்தவும்.
2. தோள்களையும் கைகளையும் தளர்த்தி, பதற்றமெல்லாம் உங்களைவிட்டுப் போவதாகக் கற்பனை செய்யவும்.
3. நெஞ்சைத் தளர்த்தியபடியே மூச்சை வெளிவிடவும்.
4. கால்கள், தொடைப்பகுதி, கெண்டைக்கால் தசைப்பகுதி அனைத்தையும் தளர்த்தவும்.
5. மனத்துக்கு இதம் தரும் ஒரு காட்சியைக் கிட்டத்தட்ட பத்து வினாடிகளுக்குக் கற்பனை செய்யவும்.
6. இது ஒத்துவராவிட்டால், 'சிந்திக்காமல் இரு' என்பதைத் திரும்பத் திரும்ப பத்து வினாடி களுக்குச் சொல்லவும்.
7. பத்து வினாடிகளுக்குள் நீங்கள் உறங்கியிருப்பீர்கள்.
முதல் ஓரிரு முறை உங்கள் முயற்சி தோல்வியுற்றதுபோல் தோன்றினாலும் நம்பிக்கையைக் கைவிடாமல் தொடர்ந்து முயலவும்.
அமர்ந்த நிலையில் இதைப் பயிற்சி செய்பவர்களும்கூட மிக விரைவில் உறங்கிவிடுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
செய்தி,படம்: இணையம்

