லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அதன் ரசிகர்கள் மட்டுமல்லாது அதன் நிர்வாகி எரிக் டென் ஹாக்கின் பாராட்டுகளையும் பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூகாசல் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் நியூகாசலின் தற்காப்பு அரணைத் தகர்க்கும் முயற்சியில் இருமுறை மட்டுமே மேன் யுனைடெட்டால் வெற்றி பெற முடிந்தது. இருப்பினும் அவற்றை கோலாக்க முடியவில்லை. ஆட்டம் 0-0 என்று சமநிலையில் முடிந்தது.
ஆனால், நேற்று அதிகாலை ஸ்பர்சுக்கு எதிரான ஆட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட யுனைடெட் குழு, எதிரணியின் அத்தனை முயற்சிகளையும் தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் ஸ்பர்சின் கோல் முனையை நோக்கி தொடர்ந்து 28 முறை தாக்குதல் நடத்திய வண்ணம் இருந்தது.
பிற்பாதி ஆட்டத்தில் 2வது நிமிடத்தில் யுனைடெட்டின் மத்திய திடல் ஆட்டக்காரர் ஃபிரெட் உதைத்த பந்து எதிரணியின் ஆட்டக்காரர் ஒருவர் மீது பட்டு வலைக்குள் புகுந்தது.
பின்னர் ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் கோல் எல்லைக்கு வெளியிலிருந்து யுனைடெட் அணித் தலைவர் புருனோ ஃபெர்னாண்டஸ் உதைத்த பந்து ஸ்பர்சின் கோல் காப்பாளர் ஹியுகோ லோரிசைத் தாண்டிச் சென்று யுனைடெட்டின் இரண்டாவது கோலாகியது.
இந்த வெற்றி குறித்து கருத்துரைத்த யுனைடெட் குழுவின் நிர்வாகி டென் ஹாக், "குழுவின் ஆட்டம் சிறப்பாக அமைந்திருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இந்தப் பருவத்தில் இதுதான் குழுவின் சிறந்த ஆட்டம் என கருதுகிறேன். தாக்குதல் என்றால் 11 ஆட்டக்காரர்களும் தற்காப்பு என்றால் 11 ஆட்டக்காரர்களும் திடலில் பாடுபட்டது பார்வையாளர்களுக்குக் கண்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது," என்றார்.
ஆட்டத்தில் தோல்வி கண்ட ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகி ஆண்டனியோ கொண்டே, "உண்மையைச் சொல்லப்போனால், இந்த ஆட்டத்தில் யுனைடெட் மிகச் சிறப்பாக ஆடியது. நாங்கள் நிறைய தவறுகளைப் புரிந்தோம். உயர்மட்ட குழுக்களோடு ஆடும்போது, நாங்கள் தடுமாறுகிறோம். செல்சி, ஆர்சனல், இப்போது யுனைடெட் போன்ற ஆட்டங்களைக் குறிப்பிடலாம்," என்றார்.
இதற்கிடையே, மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூல் தனது சொந்த அரங்கில் வெஸ்ட் ஹெம் யுனைடெட் குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அதன் வெற்றி கோலைப் போட்டவர் டாவின் நுனெஸ்.
பிரண்ஃபெட் அணியின் சொந்த அரங்கில் அதனைச் சந்தித்த செல்சி, கோல் போட முடியாமல் ஆட்டத்தைச் சமநிலையில் முடித்துக் கொண்டது. தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் வெற்றி கண்ட செல்சி இம்முறை தோல்வியைத் தழுவியது.

